குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு இதுநாள் வரையில் 13 லட்சம் பேர் இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதாவது, சராசரியாக 1 பணிக்கு 18 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப் பணி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொழில்நுட்ப சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணிகளில் உள்ள 7301 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதற்கான, விண்ணப்பபங்கள் தற்போது ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. வரும் 28ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், விண்ணப்பதாரர் இணையவழிச் சான்றிதழுக்கு அனுமதிக்கப்படுவர். இதனையடுத்து, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.
ஒவ்வொரு வகுப்புப் பிரிவுகளிலும் (ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர், பொதுப் பிரிவினர்) நியமனம் செய்யப்படவுள்ள எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு விண்ணப்பித்தார்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, எழுத்துத் தேர்வில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/ www.tnpscexamsinஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் எண் மூலம் ஒரு முறைப் பதிவு எனப்படும் நிரந்தரப் பதிவு (OTR) மற்றும் தன்விவரப் பக்கம் (Dashboard) ஆகியன கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவுக் கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நிரந்தரப்பதிவு என்பது விண்ணப்பதாரர்கள் விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும் ஒரு வழிமுறையாகும். எனவே, குரூப் 2,குரூப் 4 போன்ற குறிப்பிட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விண்ணப்பதை சமர்பிக்க வேண்டும். இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரில் அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம், அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரைதொடர்பு கொள்ளலாம். ஒரு முறைப் பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களை helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதர சந்தேகங்களை grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் படிக்க