மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டத்தினை தொடர்ந்து இன்று முதல் அரசு விரைவு பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் பெண்களுக்கென தனியாக 4 முன்பதிவு இருக்கைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின்(TNSTC) கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, உள்ளிட்ட பல்வேறு வகையான சொகுசு வசதிகள் கொண்ட 1,078 பேருந்துகள் உள்ளன. நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் வகையில் 251 வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதற்கு முன்பு பெண்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில் ஒவ்வொரு அரசு விரைவு பேருந்திலும் 2 இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த இருக்கைகளின் எண்ணிக்கையினை 4 ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் நடைப்பெற்று முடிந்த போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின் போது தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
அமைச்சர் அறிவிப்பின் அடிப்படையில், விரைவு பேருந்துகளில் தற்போது 4 இருக்கைகள் ஒதுக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. படுக்கை வசதி (Sleeper) உள்ள பேருந்தில் 4 படுக்கைகளும், இருக்கை (sitting only/ semi sleeper) மட்டும் உள்ள பேருந்தில் 4 இருக்கைகளும், இருக்கை மற்றும் படுக்கை வசதி (sleeper and semi sleeper) உள்ள பேருந்தில் 2 இருக்கை மற்றும் 2 படுக்கைகளும் பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ போக்குவரத்துத்துறை இணையதளமான (www.tnstc.in) அல்லது tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்யும்போது, பெண்களுக்கான இருக்கைகள் மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பெண்களுக்கென குறிப்பிடப்பட்ட இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது மஞ்சள் நிறத்திலிருந்து இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறிவிடும். முன்பதிவுக்கான நேரம் முடிவடையும் நிலையில், ஒதுக்கப்பட்ட இருக்கைகளை பெண்கள் முன்பதிவு செய்யாத பட்சத்தில் மற்ற பயணிகளுக்கு ஒதுக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தமிழக அரசின் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தின் வாயிலாக, 258.06 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்து இருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இத்திட்டத்தினால் ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திர செலவில் ரூ.888/- சேமிக்கின்றனர் என்பது மாநில திட்டக் குழுவின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தினை போலவே, பெண்களுக்கென பேருந்து இருக்கை ஒதுக்கீடு அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
pic courtesy: TNSTC website
மேலும் காண்க:
வாத்தியார் வேலையை உதறித்தள்ளி விவசாயம்- ஆண்டுக்கு 30 லட்சம் வருமானம்!