மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது, தற்போது சில மாவட்டங்களிலும் மட்டும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, மாமல்லபுரம், கோவில்பட்டி, ஸ்ரீபெரும்புதூர், பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாம்பரம், மாதவரம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென் மாவட்டங்களில் மழை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று வாறுகால், மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியதால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதியான பாலமோர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது குறிப்பிடதக்கது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக, இந்த மழை நீடித்தது. இதேபோல், பேச்சிப்பாறை அணை பகுதிகளிலும் மிதமான மழை பெய்ததால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வானிலை அறிவிப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தமட்டில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:
தோட்டக்கலையின் இயந்திரமயமாக்கல் திட்டம்: டிரேக்டர் மற்றும் பவர் டில்லருக்கு மானியம்!
SSC(CGL) தேர்வுக்கான இலவச பயிற்சி இந்த வாட்ஸப் எண்ணை அணுகுங்கள்