News

Thursday, 28 May 2020 01:26 PM , by: Daisy Rose Mary

Pic Courtesy: My Nation

ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் வருகிற 31 ஆம் தேதி வரை அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரூ. 3,280 கோடியில் சிறப்பு நிவாரணத் திட்டம்.

கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி, ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அக்கறையினால், ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாகவே ரூ.3 ஆயிரத்து 280 கோடி மதிப்பீட்டில் சிறப்பு நிவாரணத் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, ஏப்ரல் மாதத்தில் 2.01 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்க உதவித்தொகையுடன் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் 98.85 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவித்தொகையும், 96.30 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் ஊரடங்கு தொடர்ந்த காரணத்தினால், மே மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு தகுதியான  அளவு அரிசியும், சர்க்கரையும் ஏப்ரல் மாதத்தில் வழங்கியதைப் போன்றே விலையில்லாமல் மே மாதமும் வழங்க நான் உத்தரவிட்டேன். அதன்படி இதுவரை 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, மே மாதத்திற்கான இலவச பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இது தவிர, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ வீதம், ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து, கூடுதலான அரிசியும், 4 மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் அரிசியை இரு மடங்காக உயர்த்தி, இந்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகின்றது.

 

ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் இலவசம்

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியுடன் எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை ரேஷன் கடைகளில், விலையின்றி வழங்கப்படும்.

இவ்வாறு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை 3 மாதங்களாகத் தொடர்ந்து வழங்கி, மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான்.

வீடுகளுக்கு டோக்கன் விநியோகம்

நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வருகின்ற 29-ம் தேதி(நாளை )முதல் 31.5.2020 வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். டோக்கன்களில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அவர் அவர் ரேஷன் விலை கடைகளுக்குச் சென்று ஜூன் 1 ஆம் தேதி முதல் இலவச ரேஷன் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்

பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையின் மூலம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)