தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் எதிர்ப்பாராத காலநிலை மாற்றத்தினால் மதுரை மாவட்டத்திற்கு வரும் காய்கறிகளின் அளவு 50%-க்கும் மேல் குறைந்துள்ளது. இதனால், காய்கறிகள், குறிப்பாக தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தக்காளி விலை கிலோவுக்கு ரூ.50-க்கு மேல் உயர்ந்துள்ள நிலையில், மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் தரம் குறைந்த பச்சை மிளகாய் ரூ.140-க்கு விற்கப்படுகிறது. கோடை காலம் முடிந்தப்பின்னும், மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் அளவு சீராக இல்லை.
முன்னதாக தக்காளி அதிகளவில் கிடைப்பதால், மே கடைசி வாரத்தில் இருந்து தக்காளி விலை கிலோவுக்கு 5 ரூபாய் வரை குறைந்துள்ளது. மேலும் நஷ்டத்தை தடுக்க பல விவசாயிகள் அறுவடையை நிறுத்த முடிவு செய்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விலை உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தக்காளி விலை உயர்வு ஏன்?
இதுக்குறித்து மதுரை சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் என்.சின்னமாயன் கூறுகையில், ""மழையால் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து தக்காளி, பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளது. 25 சதவீத தக்காளி உள்ளூர் விவசாயிகள் மூலமாகவும், மீதமுள்ளவை ஆந்திரா மற்றும் கர்நாடகா சந்தைகளில் இருந்தும் வருகிறது. மழையால் அங்கும் பயிர்கள் நாசமடைந்துள்ளன.தற்போது மதுரை மார்க்கெட்டிற்கு வழக்கமான சீசனில் 100 டன் தக்காளி வரத்து வர வேண்டிய இடத்தில் வெறும் 48 டன் மட்டுமே வருகிறது. இதனால் 15 கிலோ தக்காளி பெட்டியின் விலையானது ரூ.500-முதல் ரூ.700-க்கு மேல் உயர்ந்துள்ளது. சந்தையில் தக்காளியின் தேவை அதிகமாக உள்ளதால் விலை மேலும் உயரலாம்." என்றார்.
இதைப்போல், “பச்சை மிளகாய் பயிர்களில் பூச்சி தாக்குதல்கள் காரணமாக, உள்ளூர் விவசாயிகள் வழக்கமாக ஐந்து டன்களுக்கு பதிலாக ஒரு நாளைக்கு ஒரு டன் மட்டுமே அனுப்புகின்றனர்.
அடுத்த அறுவடை காலம் ஜூலையில் தொடங்கும் வரை மற்ற காய்கறிகளும் விலை உயர வாய்ப்பு இருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாட்டுத்தாவணி மத்திய காய்கறி சந்தையில் விற்கப்படும் காய்கறியின் விலை நிலவரம் பின்வருமாறு-
- தக்காளி – ரூ.50
- பச்சை மிளகாய் – ரூ.120 - 140
- பீன்ஸ் – ரூ.80-ரூ.100
- வெங்காயம் – ரூ.70 – ரூ.80
- இஞ்சி – ரூ.90-ரூ.210
- பீன்ஸ் – ரூ.70- ரூ.80
- கத்தரி – ரூ.50
- பெரிய வெங்காயம் - 10 - 30 ரூபாய்
- பாகற்காய்- ரூ 70 - 80
- உருளைக்கிழங்கு – ரூ.30
எதிர்பாராத விலை ஏற்றத்தினால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலையினை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண்க:
ரேஷன் கடைகளில் 30 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் விற்பனை தொடக்கம்!