தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சில ரேஷன் கடைகளில் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
பன்மடங்கு விலைஉயர்வு (Multiple inflation)
பருவமழை காரணமாகத் தமிழகத்தில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால், மார்க்கெட்டிற்குச் சென்று காய்கறிகளை பொதுமக்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் சிறு வியாபாரிகள், அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். இதனால், அனைத்துக் காய்கறிகளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.குறிப்பாக தக்காளி ஒரு கிலோ ரூ. 180 வரையும், கத்திரிக்காய் ரூ.140 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.79க்கு விற்பனை (Selling for Rs.79)
இதையடுத்துக் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி மலிவு விலையில் தரமான காய்கறி மற்றும் தக்காளி மக்களைச் சென்றடையத் தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக கூட்டுறவுத் துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் நேற்று முதல் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.79க்கு விற்பனை செய்யப்பட்டதால், மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். இதையடுத்து தலைக்கு 2 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று மதியம் வரை 8 டன் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோவிற்கு 40 ரூபாய் வீதம் குறைந்துள்ளது.
ரேஷன் கடைகளில் (In ration shops)
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளிலும் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்யப்படும் எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கன மழை பெய்கிறது. தக்காளி அதிகம் விளையும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடைபட்டிருப்பது, மழை காரணமாக தக்காளி பறிக்கும் சூழல் இல்லாமை போன்ற காரணங்களால் தக்காளி விலை உயர்வு தற்காலிகமாக ஏற்பட்டு உள்ளது. இது நிரந்தரமானது அல்ல. தற்போது தக்காளியின் வரத்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...