ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்துகொண்டனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவ திவ்ய தேசத் தலங்களில் முதன்மையான தலம், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கத்தின் சித்திரை தேர் திருவிழா ஏப்ரல் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி வெவ்வேறு அலங்காரம் மற்றும் வாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முக்கிய நிகழ்வான நேற்று திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. காலை 4 :30 மணி அளவில் நம்பெருமாள் சித்திரை தேர் மண்டபத்தை அடைந்தார். பின்பு 5 :15 மணி அளவில் தேரில் எழுந்தருளினார், மற்றும் தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின் 6:15 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள், பெண்கள் கோலாட்டம் ஆடி வந்தனர். பக்தர்கள் கோவிந்தா நாமம் எழுப்பி, நம்பெருமாளை போற்றி பாடல்கள் பாடி தேரோட்டத்தை சிறப்பித்தனர்.
மே(4) சப்தாவர்ணம், மே(5) ஆளும் பல்லக்கு உற்சவம் ஆகியவை நடை பெற உள்ளன.