மனிதர்களைப் போன்ற முகஅமைப்பு கொண்ட மீன்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? நம்மை வியக்கவைக்கும் அந்த மீனின் பெயர் டிரிக்கர் மீன்.
பல்வேறு பிரமிப்புகள் புதைந்துள்ள இயற்கையின் மிக அழகான ரகசியங்களில் ஒன்று, உயிரினங்களின் பரிணாமம்.
குரங்கில் இருந்து மனிதன் பரிணமித்தான் என்ற தத்துவதைப்போன்று, மனிதனை ஒத்த முக அமைப்புகளுடன் கூடிய மீனும் இருக்கிறது.
டிரிக்கர் மீன் வகையை சேர்ந்த இந்த கிளாத்தி மீன்கள், மனிதர்களைப் போலவே, வாய், உதடு, பல் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
பொலிவான நிறம் (Bright in colour)
கிளாத்தி என்பது பொலிவான நிறங்களைக் கொண்ட மீன்களை உள்ளடக்கிய ஒரு மீன் குடும்பம். இவற்றின் உடம்பில் வரிகள் அல்லது புள்ளிகள் காணப்படுகின்றன.
கிளாத்தி மீன்கள், இந்திய-பசிபிக் கடலில் அதிகம் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான இனங்கள் மீன் அருங்காட்சியகங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
கிளாத்தி மீன்கள், ஓவல் வடிவத்தில், பெரிய தலையுடன் இருக்கும். சிப்பிகள் மற்றும் சங்குகளைக் கூட உடைக்கும், வலுவான தாடை மற்றும் பற்கள், இந்த மீன்களின் தனிச் சிறப்பு.
தனி சாம்ராஜ்யம்
இவை கூட்டம், கூட்டமாகப் பவளப்பாறைகள் உள்ள பகுதிகளில் தனி சாம்ராஜ்யம் அமைத்துக் கொண்டு வாழ்பவை. இவ்வகை மீன்கள் மலோசிய கடற்பகுதிகளில் தற்போது காணப்படுவது தெரியவந்துள்ளது.
பெரும்பாலும் பவளப்பாறைகளைச் சார்ந்தே வாழும் குணமுடையவையாக இருப்பதால், அதை விட்டு இந்த மீன்கள் அதிக தூரம் செல்லாது. பவளப் பாறைகளின் அடிப்பகுதியில் ஓட்டை அமைத்து வாழும் கிளாத்தி மீன்கள், அதனை தன் பாதுகாப்பு வாழிடமாகவும் பயன்படுத்திக் கொள்கின்றன.
டிரிக்கர் எலும்பு (Trigger Bone)
இவற்றின் உடலில் நடுவில் குறுக்காக, ஒரு மெல்லிய அதே நேரத்தில் சற்று உறுதியான எலும்பு ஒன்றும் உள்ளது. எதிரி மீன்களிடமிருந்து பாதுகாக்க டிரிக்கர் போன்ற இந்த எலும்பு உதவுவதால் இதனை டிரிக்கர் பிஷ் (Trigger Fish)என்று அழைக்கிறார்கள்.
சில சாதுவானதாகவும் சில கோபம் உடையதாகவும் இருக்கின்றன. சில நேரங்களில் கடலுக்குள் நீச்சலடிக்கும் ஸ்கூபா டைவர்ஸ்களை (Divers) ஆக்ரோஷமாக துரத்தி தாக்கவும் செய்யும். இவ்வகை மீன்கள் சுமார் 25 சென்டி மீட்டர் வரை வளரும்.
வால்துடுப்பால் நீந்தும்
பொதுவாக கடலில் வாழும் எந்த மீனும் தனது பக்கவாட்டுத் துடுப்புகளைப் பயன்படுத்தியே நீந்தும். ஆனால் கிளாத்தி மீன்களோ வால் துடுப்பால் நீந்துவதால் இது மற்ற மீன்களிடமிருந்து மாறுபடுகிறது.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான முட்டைகளை இடும் இந்த மீனினம் தனது வால்துடுப்பால் நீச்சலடித்து கடலுக்குள் செல்லும் அழகே அழகு.
தோற்றத்தில் மனிதனை ஒத்த கிளாத்தி மீன்களுக்கு, மனிதர்களைப் போன்றே சில மோசமானப் பண்புகளும் இருப்பது சுவாரஸ்யம்.
மேலும் படிக்க...
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை- சாகுபடி செய்வது எப்படி?
மலர் சாகுபடியில் நல்ல வருமானம் தரும் ஜாதிமல்லி!!