புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை கனகசெட்டிகுளம் எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் (Checkpost) கடந்த 16ம் தேதி இரவு தேர்தல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 140 நெல் மூட்டைகள் இருந்தன. இதுபற்றி லாரியில் இருந்த நபரிடம் அதிகாரிகள் கேட்டதற்கு, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் பெருமாள்சேரியில் இருந்து விளைநிலங்களில் அறுவடை (Harvest) செய்த நெல் மூட்டைகளை கடலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைக்கு எடுத்துச் செல்வதாக கூறியுள்ளார். அதற்கான ஆவணத்தை காண்பிக்குமாறு அதிகாரிகள் கூறி பறிமுதல் செய்துள்ளனர். அடுத்த அரை மணி நேரத்தில் உரிய ஆவணத்தை செக்போஸ்ட் அதிகாரிகளிடம் நெல் வியாபாரி செந்தில்குமார் காண்பித்துள்ளார். ஆனால் அதை அவர்கள் ஏற்காமல், கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.
வீணாணது நெல் மணிகள்
கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று துணை கலெக்டரிடம் நெல் மூட்டைகளை வாங்கியதற்கான ஆவணத்தை கொடுத்துள்ளார். அதற்கு அவர், எனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை, காலாப்பட்டு காவல்நிலையத்தில் கொடுத்து விடுங்கள் எனக்கூறியுள்ளார். காவல் நிலையத்தில் ஆவணத்தை கொடுத்தபோது அதன்பிறகும் மாறி, மாறி அலைக்கழிப்பு செய்துள்ளனர். இதனால் நெல் மூட்டைகளுடன் லாரி, கடந்த 6 நாட்களாக காலாப்பட்டு காவல்நிலையம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விளைநிலங்களில் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் என்பதால் ஈரம் (Moisture) காரணமாக முளைவிட தொடங்கிவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நெல் வியாபாரி செந்தில்குமார் (Sendhil kumar) லாரியை விடுவித்து விடுங்கள், ரூ.2 லட்சம மதிப்புள்ள நெல்மணிகள் வீணாகிவிட்டது என கண்ணீர்மல்க கதறி கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் மனம் இறங்கவில்லை.
அதிகாரிகள் அலட்சியம்
விவசாயிகளின் விளைபொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. இருப்பினும் அதிகாரிகள் தடுத்து சோதனை நடத்தினர். உரிய ஆவணத்தை காண்பித்தும் கடந்த 6 நாட்களாக நெல் லாரியை விடுவிக்க மறுக்கின்றனர். ஈரப்பதம் (Moisture) காரணமாக நெல்லில் இருந்து முளைவிட தொடங்கிவிட்டது. அதிகாரிகளின் அலைக்கழிப்பால் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நெல் வீணாகி விட்டது. லாரியில் இருந்து நெல் மூட்டைகளை கீழே இறக்கி வைக்கவும் அனுமதிக்க மறுக்கிறார்கள். இதனால் லாரி வாடகையும் (Lorry Rent) கூடிக்கொண்டே போகிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரம் செலவாகிறது. வழக்கு வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள், நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்கிறோம் என்று சொல்லியும் அதிகாரிகள் கேட்கவில்லை என வேதனை கலந்த கண்ணீருடன் நெல் வியாபாரி செந்தில் குமார் கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பழங்காலத்தில் நெல் மற்றும் தானியங்களை சேமித்து வைக்க உதவிய மண் கலன் கண்டுபிடிப்பு!
சமவெளி பகுதிகளில், ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சி! கவலையில் விவசாயிகள்!