கொரோனா வைரஸில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸால் (B.1.617.2 ) ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், முழுமையாகச் செலுத்தியவர்கள், தடுப்பூசி செலுத்தாதவர்கள் என 3 பிரிவினரும் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தாலும், தடுப்பூசி (Vaccine) செலுத்தியவர்களிடையே உயிரிழப்பு கணிசமாகக் குறைந்துள்ளது என்று சென்னையில் ஐசிஎம்ஆர் (ICMR) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வறிக்கை
ஐசிஎம்ஆர் அமைப்பின் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனம் சார்பில் தொற்றுநோய் தடுப்பு இதழில் கடந்த 17-ம் தேதி ஆய்வறிக்கை ஐசிஎம்ஆர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலையின் (Corona Second Wave) போது சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா 2-வது அலையில் ஏப்ரல், மே மாதங்களில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் சென்னையும் ஒன்றாகும். மே மாதத்தில் 3 வாரங்களிலும் நாள்தோறும் சராசரியாக 6 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் எடுக்கப்பட்ட செரோ சர்வேயில் 45 சதவீத மக்களின் உடலில் கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity) இருந்தும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 3 கொரோனா பரிசோதனை மையங்களுக்கு வந்த நோயாளிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனை மையத்துக்கு மே மாதம் முதல் வாரத்தில் வந்த 3,790 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 373 பேர் கொரோனா தொற்றால் பாதி்க்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன் தடுப்பூசி செலுத்தியிருந்தனர். மற்ற 3,417 பேர் எந்தத் தடுப்பூசியும் செலுத்தவில்லை.
இந்த ஆய்வின் முடிவில் இரு டோஸ் தடுப்பூசி (2 Dose Vaccine) முழுமையாகச் செலுத்தியவர்கள் தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியர்களில் 3 பேரும், தடுப்பூசி செலுத்தாதவர்களில் 7 பேரும் உயிரிழந்தனர்.
தடுப்பூசி செலுத்திய 373 பேரில் 354 பேர் (94.9%) மட்டுமே பதிவு செய்யப்பட்டது. இதில் 354 பேரில் 241 பேர் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தினர், 113 பேர் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தனர். தடுப்பசி செலுத்தாத 3,417 பேரில் 185 பேர் மட்டுமே அதாவது 5.4 சதவீதம் பேர் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்.
தடுப்பூசி செலுத்தாதவர்களில் சராசரி வயது 47ஆகவும், ஒரு தடுப்பூசி செலுத்தியவர்களின் சராசரி வயது 53 ஆகவும், முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களின் சராசரி வயது 54 ஆகவும் இருந்தது.
சுகாதாரத்துறைக்கு கொரோனா தொற்று சவாலாக உள்ளது!
இந்த ஆய்வில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் , தடுப்பூசி செலுத்தாத பிரிவினர் என அனைவருமே டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஆனால், தடுப்பூசியை முழுமையாக அதாவது 2 டோஸ் செலுத்தியவர்கள் மத்தியில் உயிரிழப்பு இல்லை.
அதேசமயம் ஒரு தடுப்பூசி செலுத்தியிருந்தால் கூட, கொரோனாவில் பாதிக்கப்பட்டாலும் அதன் தீவிரம் தடுக்கப்படுகிறது. அதாவது, மருந்து அல்லாத செயல்பாடுகளை தொடர்ந்து கடைபிடித்தால் பரவலைத் தடுக்க முடியும். தொற்றுநோய் பரவும் வேகத்தைக் குறைக்கவும், அடுத்தடுத்த அலைகள் உருவாகாமல் தடுக்க தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும், செலுத்துவோர் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும்.
புதியவகை உருமாற்ற வைரஸ் ஏதும் இருக்கிறதா என்பதைக் கண்டறிய அவ்வபோது முறைப்படுத்தப்பட்ட மரபணு ரீதியான பரிசோதனை, கண்காணிப்பும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு உருவாகும் உருமாற்ற வைரஸை எதிர்கொள்ளும் திறன் தடுப்பூசிக்கு இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
கோவிஷீல்ட் (Covishield) மற்றும் கோவாக்சின் (Covaxine) தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கூட, டெல்டா வகை வைரஸ்கள் உடலில் உருவாகியிருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை குறைத்து விடுகிறது என்பது ஆய்வில் தெரியவருகிறது.
மேலும் படிக்க
தடுப்பூசியை கலந்து போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!