பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில், அறுவடை நெல்லின் தரம் குறித்து வேளாண் மற்றும் காப்பீடு நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்
எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கும் வகையில் விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் செயல்படுத்துகிறது.
4 ஆண்டுகளில் ரூ.337 கோடி இழப்பீடு
நடப்பாண்டில் மாவட்டத்தில் சம்பா நெற்பயிருக்கு 758 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு ராபி பருவம் முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விவசாயத் துறை மூலம் கடந்த 2019ம் ஆண்டு வரை 337.23 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
கடலூரில் தொடங்கியது ஆய்வு
கடலூர் மாவட்டத்தில், அறுவடை நெல் தரத்தை ஆய்வு செய்து அதற்கேற்ப இழப்பீடாக காப்பீடு தொகை வழங்குவதற்கான நடவடிக்கையில் வேளாண் துறை இறங்கியுள்ளது. அதையொட்டி, பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறையால் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அறுவடை செய்யப்பட்டு வரும் நெற்பயிர்கள் ஆய்வு துவங்கியுள்ளது. வயல்களில் உள்ள பயிர்களின் விபரங்களை, புள்ளியியல் துறை, வருவாய்த்துறை, பயிர் காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள், சம்மந்தப்பட்ட நிலத்தின் விவசாயி மற்றும் இதர விவசாயிகள் முன்னிலையில் பயிர் அறுவடை சோதனை நடத்தி வருகின்றனர்.
கடலுார் தாலுகாவில் பில்லாலி கிராமத்தில் வேளாண் துறை இணை இயக்குநர் முருகன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெல் வயல்களில் மேற்கொள்ளப்படும் அறுவடை நெல் குறித்த புள்ளி விபரங்கள், மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ள தனி செயலியில் பதிவேற்றம் செய்வதுடன், புள்ளியியல் துறை, பயிர் காப்பீட்டு நிறுவனத்திற்கு அளிக்கப்படுகிறது.
மார்ச் மாதத்தில் இழப்பீடு?
பின்னர், கடந்த ஐந்து சாதாரண ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற சராசரி மகசூலுடன் ஒப்பிட்டு நடப்பு ஆண்டில் மகசூல் குறைவாக இருப்பின் அந்த சதவீதத்திற்கு ஏற்ப இழப்பீடு அறிவிக்கப்படும். பின், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வுப்பணிகள் வரும் மார்ச் வரை நடைபெறும் என்பதால் அதன் பிறகே காப்பீடு தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
வேளாண் பல்கலைக்கழத்தில் 21 காலிப் பணியிடங்கள்! - உடனே விண்ணப்பிக்க... முழு விபரம் உள்ளே!
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!