விவசாயத்துக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது செழுமையான மண்ணாகும். பயிரின் வளர்ச்சி என்பது மண்ணிலுள்ள சத்துக்களை கொண்டு நிர்ணயிக்க படுகிறது. எனவே மண்ணிலுள்ள சத்துக்களின் அளவை அறிந்து, அதற்கேற்ப உரங்களை இட வேண்டும். இதற்காக விவசாயிகள் அனைவரும் கட்டாயம் மண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் (National Mission for Sustainable Agriculture (NMSA)) கீழ் 2015 - 2016, 2016 - 2017 முதல் கட்டமாகவும், 2017 -2018, 2018- 2019 இரண்டாம் கட்டமாகவும் மண் பரிசோதனைகள் செய்யப்பட்டு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன. நடப்பாண்டில் தேசிய மண்வள இயக்க திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஐந்து கிராமங்கள் தேர்வு செய்யப்பட்ட மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி வேளாண்மை துறை அலுவலர்கள் மூலம் நடை பெற்று வருகிறது. இம்மாதத்திற்குள் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயக்கப் பட்டுள்ளன.
சேகரிக்கப்பட்ட மண்ணை அந்தந்த வட்டாரங்களில் உள்ள மண் பரிசோதனை ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதில் மண்ணின் உள்ள கார, அமில தன்மை, உப்பின் தன்மை, அடிப்படை சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணூட்ட சத்துக்களின் அளவு ஆகியன ஆய்வு செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் வழங்கப்படும். சம்பா சாகுபடிக்கு முன்னர் அனைத்து விவசாயிகளும் தங்களின்புதிய மண் வள அட்டையை (Soil Fertility Card) பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மண் பரிசோதனையின் பயன்கள் (Advantages of Soil Fertility Test)
- விளை நிலங்களில் உள்ள மண்ணின் நிறைகுறைகளை அறிந்து கொள்ள இயலும். ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை பரிந்துரை செய்கிறது.
- ஆய்வின் அடிப்படையில் மண்ணில் உள்ள கரிமச்சத்துகளை அறிந்து அதற்கேற்ப கரிம உரங்களையும், உயிர் உரங்களையும் பரிந்துரைக்கின்றன.
- மண்ணின் தனமைக்கேற்ப இரசாயன உரங்களின் அளவை பரிந்துரைத்து உரச் செலவை கனிசமாக குறைக்க உதவுகிறது.
- களர் மற்றும் உவர் நிலத்தின் அமிலத்தன்மைகளை கண்டறிந்து அவற்றை சீர்படுத்தும் முறைகளையும், களர் நிலத்திற்கு தேவையான ஜிப்சம் அளவையும் துள்ளியமாகக் கண்டறிய இயலும்.
- மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிர்களை தேர்வு செய்து தருகிறது.
விவசாயிகள் செய்ய வேண்டியவை
மண் மாதிரிகளை பாலித்தீன் பைகளில் போட்டு அதனை மற்றொரு பாலித்தீன் பை அல்லது துணிப்பைக்குள் போட வேண்டும். மண் மாதிரி விவர படிவத்தை பென்சில் கொண்டு நிரப்பி இரண்டு பைகளுக்கு இடையில் வைக்க வேண்டும்.
- விவசாயின் பெயர் மற்றும் முழு விவரம்.
- நிலத்தின் முழு விவரம்
- பாசன முறை (கிணற்றுப்பாசனம், குளத்துப்பாசனம், ஆற்றுப்பாசனம்).
- இறுதியாக அறுவடை செய்த பயிர் மற்றும் பயன்படுத்தப்பட்ட உரங்களின் விவரம்
- அடுத்து பயிரிடப்போகும் பயிர்
- நிலத்தில் குறிப்பிடும் படியான பிரச்னை எதாவது இருந்தால், அது மறக்காமல் குறிப்பிட வேண்டும்.
விவசாயிகள் அனைவரும் கட்டாயம் இதனை மேற்கொண்டு வரும் பருவங்களில் அதிக மகசூலை பெற வேண்டும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.