விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வது குறித்த திட்டம் எதுவும் தற்போது மத்திய அரசிடம் இல்லை என நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ச்சியாக கடன் தொல்லையால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், தேர்தலின் போது சில மாநிலங்களில் முக்கிய அரசு கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இதனடிப்படையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக எம்பி சுக்பீர் பாதலின் எழுப்பிய விவசாய கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு நிதியமைச்சகம் பதிலளித்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தயாரித்த, “கிராமப்புற இந்தியாவில் உள்ள விவசாய குடும்பங்கள் மற்றும் நிலம் மற்றும் கால்நடை வைத்திருப்பவர்களின் நிலைமை மதிப்பீடு, 2019” என்ற அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சிரோமணி அகாலிதளத்தின் தலைவரும் பெரோஸ்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான சுக்பீர் பாதலின் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சகம் பதிலளித்துள்ளது.
ஆந்திராவில் விவசாய குடும்பத்திற்கு சராசரியாக ரூ.2,45,554 கடன் நிலுவையில் உள்ளதாகவும்,ஆந்திராவை தொடர்ந்து கேரளாவில் விவசாய குடும்பத்திற்கு சராசரியாக ரூ.2,42,482, பஞ்சாப்பில் ரூ.2,03,249 கடன் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்ற குறிப்பிடத்தக்க மாநிலங்களில் நிலுவையில் உள்ள கடன் விவரம் – ஹரியானா (ரூ.1,82,922), இமாச்சலப் பிரதேசம் (ரூ.85,824) மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் (ரூ.30,435)
மேலும் படிக்க
ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி வாங்க 35 % ரூ.75 இலட்சம் வரை மானியம்
கடன் தள்ளுபடி திட்டம் எதுவுமில்லை – நிதியமைச்சகம் தகவல்:
கடன் தள்ளுபடி குறித்த எம்.பி.யின் மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ள நிதியமைச்சகம், பஞ்சாப் விவசாயிகள் வங்கிகள் மற்றும் கடன் வழங்குபவர்களிடமிருந்து பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும், தற்போது மத்திய அரசிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் (PAU) சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், 2000-18 வரை ஆறு மாவட்டங்களில் 9,291 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 88 சதவீத விவசாயிகள் விவசாயம் தொடர்பான கடன்களால் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதைப்போல் தேசிய குற்ற ஆவண தகவல் அடிப்படையில் ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அளித்த தகவலில், நாட்டில் 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் 1.12 லட்சம் தினக்கூலிகள் தற்கொலை செய்து உள்ளனர். இவர்கள் தவிர குடும்ப தலைவிகள் 66,912 பேர், சம்பள தாரார்கள் 43,420 பேர், மாணவர்கள் 35,950 பேர், விவசாய துறையில் 31,839 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றளவிலும் , மற்ற பிரச்சினைகள் தவிர்த்து கடன் தள்ளுபடி என்கிற கோரிக்கையை முன்னிறுத்தி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :
நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதில் பாஜக தோல்வி-சித்தராமையா குற்றச்சாட்டு
தோல் அம்மை நோயினால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு எவ்வளவு?