கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தும் வகையில் யோகா பயிற்சி வழங்க மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகளும் முயன்று வருகின்றன. மருந்து கிடைத்தால், மட்டுமே, நோய் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனாவின் பாதிப்பு 10 லட்சத்தை கடந்தாலும் மீட்பு விகிதம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது அது 63.33 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நோயாளிகளுக்கு யோகா (yoga practice)
இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்ட சிறந்த வழியாகக் கருதப்படும், யோகாவின் பலன்கள், கொரோனா நோயாளிகளுக்கும் கிடைக்கும் வகையில் யோகா வகுப்புகள் நடத்த மத்தியஅரசின் ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவன இயக்குனர் டாக்டர் ஈஸ்வர் பஸாவரட்டி கூறியதாவது, அரசு ஏற்படுத்தியுள்ள கொரோனா மையங்களில் இதற்கென 30 யோகா பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் யோகா வகுப்புகள் நடத்தப்படும். யோகா மனத்திற்கும் உடலிற்கும் சிறந்த மருந்து என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்டுவதற்கு யோகா சிறந்த வழியாக உள்ளதால், ஐக்கிய நாடுகளில் 175 நாடுகள் யோகாவை அங்கீகரித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (Ministry of Health and Family Welfare) என்பது இந்தியாவின் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தும் மத்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும்.
இவ்வமைச்சகத்தில் நான்கு துறைகள் உள்ளன. அவை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ஆயுஷ் துறை, சுகாதார ஆய்வுத்துறை மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை ஆகும்.
இதில் ஆயுஷ் துறை என்பது, கடந்த 2003 நவம்பரில் ஆயுர்வேதம், யோகம் மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறையின் சுருக்கமாக ஆயுஷ் துறை என்று பெயர்மாற்றப்பட்டது.
இந்திய பாரம்பரிய மருத்துவத் துறையில் கல்வி, தரநிர்ணயம், கட்டுப்பாடுகள், மருத்துவப் பொருள் மேம்பாடு, ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை இத்துறை கையாளுகிறது.
ஆயுஷ் துறை, பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலம் செயல்படுத்துவதற்கான தேசிய ஆயுஷ் இயக்கத்தை (NAM) தொடங்கியது.
பாரம்பரியமான இந்த மருத்துவ முறைகளை மக்களிடையே பிரபலப்படுத்தவும், இந்த மருத்துவ முறைகளுக்கான கல்விமுறையை வலுப்படுத்துவதும், இந்தத் துறை மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்தவும், அம்மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிவகைகளைச் செய்வதும் தேசிய ஆயுஷ் இயக்கத்தின் நோக்கமாகும்.
மேலும் படிக்க...
கொரோனா காலத்திற்கு ஏற்ற மஞ்சள் மசாலா பால்- எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது!
என்னதான் இருக்கு ஒமோகா-3 ஃபேட்டி ஆசிட்டில் - தெரிந்துகொள்ள சில டிப்ஸ்!