தொழிலாளர் வருங்கால வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது ஒன்றிய நிதியமைச்சகம். இதன்படி 2022- 2023 ஆம் நிதியாண்டில் பி.எஃப் வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தின் மூலம் 70 மில்லியன் EPFO சந்தாதாரர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. FY-22 க்கான பி.எஃப் வட்டி விகிதம் 8.10% ஆக இருந்த நிலையில் அதனை 8.15% உயர்த்தியுள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையிலான EPFO இன் மத்திய அறங்காவலர் குழு, மார்ச் 28 அன்று FY23க்கான 8.15% வட்டி விகிதத்தை பரிந்துரைத்தது.
இந்நிலையில் தொழிலாளர் அமைச்சகம், திங்களன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், "இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், 1952 ஆம் ஆண்டு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம், 1952 இன் பாரா 60(1) இன் கீழ், 2022-23 ஆம் ஆண்டுக்கான வட்டியை 8.15 சதவீதத்திற்கு வரவு வைக்க மத்திய அரசின் ஒப்புதலைத் தெரிவித்தது. அந்த வட்டியை உறுப்பினர்களின் கணக்கில் வரவு வைக்க சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) பரிந்துரையைத் தொடர்ந்து, வட்டி விகிதம் நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் உறுப்பினர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். பொதுவாக, வட்டி விகிதம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்படும். இவ்வளவு நாளாக காத்திருந்த நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
FY23-க்கான EPF பங்களிப்புகளுக்கான 8.15% வட்டி விகிதம் கடந்த FY22-க்கான 8.1% வட்டி விகிதத்தை விட சற்று அதிகமாகும். இதற்கு முன், 1977-78 ஆம் நிதியாண்டில், பிஎஃப் டெபாசிட்டுகளுக்கான குறைந்த வட்டி விகிதம் 8% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உறுப்பினர்கள் தங்கள் EPF பங்களிப்புகளுக்கு அதிக வட்டி விகிதத்தை எதிர்பார்க்கிறார்கள் ஆனால் வட்டி விகிதத்தின் முடிவு ஓய்வூதிய நிதி மேலாளரின் திட்டமிடப்பட்ட வருவாயை அடிப்படையாகக் கொண்டது. FY-23 நிதியாண்டில், EPFO ரூ. 90,497.57 கோடி வருமானம் ஈட்டுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
FY22-க்கான வட்டி பங்கீடு வரவு மென்பொருள் சிக்கல்கள் காரணமாக சந்தாதாரர்களுக்கு தாமதமானது. ஏனெனில் சந்தாதாரர்களின் பாஸ்புக்கை வரிக்குரிய மற்றும் வரியற்ற பங்களிப்புகளாகப் பிரிக்க வேண்டியிருந்தது. 2021-22 ஆம் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட EPF சேமிப்பு வருமானத்தின் மீதான வருமான வரி ரூ.2.5 லட்சத்துக்கும் மேலான பங்களிப்புகளுக்குக் காரணமாக இருந்தது.
சுமார் 70.2 மில்லியன் பங்களிப்பாளர்கள் மற்றும் 0.75 மில்லியன் பங்களிப்பு நிறுவனங்களுடன் நாட்டின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதி மேலாண்மை அமைப்பாக EPFO திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
மாநிலம் வாரியாக ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை?