இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு நிலையை வலுப்படுத்தவும், சேமிப்புக் குறைவால் விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பதைத் தடுக்கவும், நாட்டின் உணவு தானிய சேமிப்புத் திறனை 700 லட்சம் டன்களாக உயர்த்த 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டம் - "கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம்" என்கிற பெயரில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
700 லட்சம் டன்களை சேமிப்பதற்கான திறன் கூடுதலாக ஐந்து ஆண்டுகளில் முடிவடையும் என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் புதன்கிழமை புதுதில்லியில் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை அறிவித்தார்.
இந்தியாவில் தற்போது 1450 லட்சம் டன்கள் சேமிப்புத் திறன் இருப்பதால், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் 47 சதவீதத்தை மட்டுமே சேமித்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டமானது "சுமார் ரூ. 1 லட்சம் கோடி செலவில்" தொடங்கும் என்றும், திட்டத்தின் வடிவமைப்பின்படி ஒவ்வொரு தொகுதிக்கும் 2,000 டன் கொள்ளளவு கொண்ட குடோன் அமைக்கப்படும் என்றும் தாக்கூர் கூறினார். இத்திட்டத்தை எளிதாக்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர், உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் ஆகியோரைக் கொண்ட மத்திய அமைச்சர்கள் குழு (IMC) அமைக்கப்படும்.
திட்டத்தின்படி அடுத்த 7 நாட்களில் தேசிய அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த 15 நாட்களுக்குள் நடைமுறை வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 நாட்களுக்குள் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் பிஏசிஎஸ் (PACS) இணைப்பிற்கான ஒரு போர்டல் உருவாக்கப்படும் மற்றும் முடிவெடுத்த 45 நாட்களுக்குள் முன்மொழிவை செயல்படுத்தத் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் 1,00,000-க்கும் மேற்பட்ட PACS உறுப்பினர் தளத்துடன், 13 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் உறுப்பினர்களாக இருப்பதால், உணவுப் பாதுகாப்பை மட்டும் வலுப்படுத்தாமல், PACS அளவில் மற்ற வேளாண் உள்கட்டமைப்புகளுடன் பரவலாக்கப்பட்ட சேமிப்புத் திறனை அமைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளது.
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்வதற்கான திட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) கொள்முதல் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப் படுகிறது.
மேலும் காண்க:
PM kisan 14 வது தவணை வழங்கும் உத்தேச தேதி அறிவிப்பு!
அசுர வேகமெடுக்கும் செயற்கை இழை உற்பத்தி- சமாளிக்குமா தென்னை நார்?