தமிழகத்தில் பணிபுரியும் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படாமல் தள்ளிப் போனது.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 1.9.2019ல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும்.
கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊதிய உயர்வு உடன்பாடு ஏற்படாமல் தள்ளிப் போனது. 2 வருடமாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு வழங்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 4வது கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், அதிகாரிகளும், தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
அமைச்சர் அறிவிப்பு
இந்த பேச்சுவார்த்தையின்போது போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அதிக பட்சமாக 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நீண்ட காலமாக பதவி உயர்விற்காக காத்திருப்போருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தொழிலாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
மூத்த குடிமக்களுக்கு ஏசி ரயிலில் ஓசி பயணம்- அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!