பொதுவாக ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சர்வதேச சந்தையினை பொறுத்து சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். இது மட்டும் அல்ல நாளை முதல் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. அது என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.
சிலிண்டர் விலை (Cylinder Price)
ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும். இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் விலையினை பொறுத்து மாற்றம் இருக்கலாம். இது நேரடியாக சாமானியர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வணிக ரீதியிலான சிலிண்டர் விலை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்குமா? என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஆயுள் சான்றிதழ் (Life Certificate)
ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் ஆயுள் சான்றினை சமர்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழை சமர்பிக்க நவம்பர் 30ம் தேதியன்று கடைசி தேதியாகும். ஆக இதற்குள் சமர்பிக்கப்படாவிட்டால், அது ஓய்வூதியம் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
ரயில்கள் நேரம் மாற்றம் (Train Timing Change)
பொது போக்குவரத்துகளில் இன்னும் மக்கள் மத்தியில் பிரதானமாக இருப்பது ரயில் போக்கு வரத்து தான். இதில் கட்டணமும் குறைவு.அதே சமயம் நீண்டதூரம் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் இது சாமானியர்கள் மத்தியில் விருப்பமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் பல ரயில்களின் நேரம் என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆக நீங்கள் பயணம் செய்ய நினைக்கும் முன்பு இதனை முழுமையாக தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது நல்லது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது KYC அப்டேஷனை டிசம்பர் 12ம் தேதிக்குள் அப்டேட் செய்யப்பட வேண்டும். அப்படி சரியான நேரத்தில் செய்யப்படாவிட்டால், உங்கள் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்படலாம். ஏற்கனவே போதிய கால அவகாசத்தினை கொடுத்துள்ள நிலையில், இந்த முறை நீட்டிப்பு இருக்குமா? என்பதும் கேள்வியாக உள்ளது. இதனை ஆன்லைனிலும் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் செய்ய முடியாதவர்கள் வங்கிக் கிளையிலும் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு (Electricity-Aadhar Link)
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான TANGEDCO, நுகர்வோர் அனைவரும் ஆதாரை டிஎன்இபி கணக்குடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் தமிழக மின் நுகர்வோர் டிஎன்இபி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கும் செயல்முறையை https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணைய பக்கத்தில் சென்று செய்யலாம். இதை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டால், எதிர்காலத்தில் மின்சார கட்டணம் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
மேலும் படிக்க
இனி ஞாயிற்றுக் கிழமையிலும் இந்த வங்கி இயங்கும்: விடுமுறையில் மாற்றம்!
வங்கி கணக்கில் ரூ.1,000 பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு!