தடுப்பூசி முகாமில் இளைஞர் ஒருவருக்கு சில நிமிட இடைவெளியில் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அவரது உடல் நிலையை டாக்டர்கள் கண்காணிக்கின்றனர்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா பகுதியில் உள்ள கோடலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் அருண், 19; தினக்கூலி தொழிலாளி. இங்குள்ள உயர்நிலைப்பள்ளியில், கடந்த, 1ல் நடந்த கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) முகாமில் ஊசி போடச் சென்றார். அங்கிருந்த சுகாதார ஊழியர்கள் அவருக்கு முதலில் ஒரு 'டோஸ்' தடுப்பூசி போட்டனர்.
இரண்டாவது டோஸ்
'சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லுங்கள்' என்றனர். அதனால் தடுப்பூசி போடப்படும் அறையிலேயே அருண் இருந்தார். அவரை அழைத்த செவிலியர் ஒருவர், தடுப்பூசி போடத் தான் காத்திருக்கிறார் என நினைத்து இரண்டாவதாக ஊசி போட்டு அனுப்பினார். 'ஏற்கனவே எனக்கு தடுப்பூசி போட்டு விட்டனர்; இது இரண்டாவது 'டோஸ்' ஊசியா...' என, அந்த இளைஞர் அப்பாவித்தனமாக கேட்க, அப்போது தான் தவறை உணர்ந்த சுகாதாரத் துறையினர், டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த இளைஞர் முக கவசம் அணிந்திருந்ததால் இந்த குழப்பம் நடந்ததாகவும், அவர் சரியான போன் எண்ணை கொடுக்கவில்லை என்றும் சுகாதார ஊழியர்கள் கூறினர். எனினும் மூன்று மணி நேரம் அந்த இளைஞரை கண்காணிப்பில் வைத்திருந்த பின், வீட்டுக்கு அனுப்பினர். வீட்டுக்கு சென்ற பிறகும், அவரது உடல் நிலையை மருத்துவ வல்லுனர்கள் கண்காணித்து வருகின்றனர். நேற்று அதிகாலை வரை அவரது உடல் நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் படிக்க
விரைவாக பரவும் தடுப்பூசியால் தடுக்க முடியாத வீரிய வைரஸ் கண்டுபிடிப்பு!