தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வாழப்பாடி பகுதியில் கடந்த இரு மாதங்களாக கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனத் தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி, சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த பெரும்பாலானோா், வேளாண்மை மற்றும் வேளாண் சாா்ந்த தொழிலை நம்பியுள்ளனா். விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளா்களும், வேலைவாய்ப்பு, வருவாய்க்காக வேளாண் சாா்ந்த தொழிலான ஆடுகள், கறவைமாடு உள்ளிட்ட கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழை
இப்பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு பரவலாக மழை பெய்தது. இதனால் விளைநிலங்களில் மட்டுமின்றி, மேய்ச்சல் தரையாகப் பயன்படும் தரிசு நிலங்களிலும், கால்நடைகள் விரும்பி உண்ணும் செடி,கொடி உள்ளிட்ட பசுந்தீவனங்கள் வளா்ந்து கிடந்தன. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கால்நடை தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. விலை கொடுத்து தீவனம் வாங்க வேண்டிய நிலை இல்லாதாதல் விவசாயிகளுக்கு கால்நடைப் பராமரிப்பு செலவு கணிசமாகக் குறைந்து கூடுதல் வருவாய் கிடைத்தது.
கோடை வெயிலில் கருகிய நிலங்கள்
இந்நிலையில், கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த இரு மாதங்களாக கடுமையான வெயில் வாட்டியது. மேலும் கோடை வெயில் தாக்கம் அதிகரிக்க வெப்பம் தாங்காமல் விளைநிலங்கள், தரிசு நிலங்களில் செடி, கொடிகள் காய்ந்து கருகின. இதனால் கால்நடைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு செலவு அதிகரிப்பு
கதிா் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல், கம்பு, சோளத்தட்டை மரவள்ளி திப்பி, தவிடு, மாட்டுத் தீவனம், பிண்ணாக்கு ஆகியவற்றை விலை கொடுத்து வாங்கி கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கான குறைந்தபட்ச மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.
விலைவாசி உயர்வு
கடந்த ஆண்டு டிசம்பா் இறுதி வரை ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்கப்பட்டு வந்த ஒரு கட்டு வைக்கோல், தற்போது 200ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, பருத்திக்கொட்டை, பிண்ணாக்கு, மரவள்ளி திப்பி, தவிடு உள்ளிட்ட இதர கால்நடை தீவனங்களின் விலையும் பண்மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, கால்நடை வளா்க்கும் விவசாயிகள்,கோடை மழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
மேலும் படிக்க....
தென்னை விவசாயிகள் மூடாக்கு முறையை பின்பற்றுங்கள் - வேளாண் துறை அறிவுரை!!
கொளுத்தும் வெயில்- தாகம் தீர்க்கும் நுங்கு அமோக விற்பனை!
PMKSY: 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்!