வீணாகும் காய்கறிகளை, நேரடியாக கால்நடைகளுக்கு கொடுக்க கூடாது. பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனத்தோடு கலப்பு தீவனமாக மட்டுமே அளிக்க வேண்டும்,' என, கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வீணாகும் காய்கறிகள்
திருப்பூர் மாவட்டம், உடுமலை ராஜேந்திரா ரோடு, ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் தினசரி மார்க்கெட், உழவர் சந்தை செயல்படுகின்றன. இது தவிர, பல இடங்களில் வாரச்சந்தை கூடுகிறது. அப்போது, விலை இல்லாமல் தெருவில் வீசப்படும் தக்காளி, தர்பூசணி உள்ளிட்டவைகள், கால்நடைகளுக்கு நேரடி உணவாக வழங்கி வருகின்றனர். இவைகளை கால்நடைகள் உட்கொள்வதால் பாதிப்பு ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப் புறங்களிலும், வீடுகளில், வீணாகும் காய்கறிகளை நேரடியாக கால்நடை களுக்கு தீவனமாக வழங்குகின்றனர்.
தீவனமாகும் அழுகிய காய்கறிகள்
இதுதொடர்பாக கால்நடைத்துறை மருத்துவர்கள் கூறுகையில், சந்தையில், விலை கிடைக்காது தக்காளி, முள்ளங்கி, வெண்டைக்காய், தர்பூசணி உள்ளிட்ட காய்கறிகளை ஆங்காங்கே துாக்கி வீசி செல்கின்றனர். இவை அழுகி, அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு உணவாக மாறி வருகின்றன. சிலர், இதனை அள்ளிச் சென்று மாடுகளுக்கு உணவாக அளித்து வருகின்றனர்.
நுண்கிருமிகள் தாக்கும் அபயாம்
இவைகளை உட்கொள்வதால், ஆடு, மாடுகள், அதிகளவில் தக்காளியை உட்கொள்வதால், வயிற்றில் நுண் கிருமிகள் அதிகரிக்கும். கார அமிலத்தன்மை குறைந்து, மாடுகளின் வயிற்றில் புண் தோன்றி, அமில நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.வயிற்றில் அதிகமாக சுரக்கும் லாக்டிக் அமிலம், ரத்த ஓட்டத்தை அடைத்து ரத்தத்தின் தன்மையை மாற்றி விடும். ஒரு கட்டத்தில், மாடுகள் தீவனம் உண்ணாது. அசை போடாது. உடல் நிலை பாதிக்கும்.
கலப்பு தீவனமாக கொடுங்கள்
எனவே, வீணாகும் காய்கறிகளை, பசுந்தீவனம் மற்றும் அடர்த் தீவனத்தோடு கலப்புத் தீவனமாக, குறிப்பிட்ட அளவில் மட்டுமே அளிக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க...