கொத்தமல்லி தழைகளை விலைக்கு வாங்கி தேனி வாரச்சந்தைக்கு கொண்டு வந்து, பொதுமக்களுக்கு இலவசமாக விஜய் ரசிகர்கள் விநியோகம் செய்தனர்.
கொத்தமல்லி சாகுபடி:
வடகிழக்கு பருவமழை (Northeast monsoon) காரணமாக தேனி மாவட்டத்தில் காய்கறி உள்ளிட்ட அனைத்து விளை பொருட்களும் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதில் கொத்தமல்லி தழைகள் (Coriander leaves) ஒரு கட்டு ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேனி அருகே உள்ள அம்மச்சியாபுரம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி சாகுபடி (Cultivation) செய்யப்பட்டு வருகிறது. விலை வீழ்ச்சி காரணமாக கொத்தமல்லி தழைகளை பறிப்பவர்களுக்கான கூலி வாகனச் செலவு உள்ளிட்டவைகளுக்கு, விவசாயிகள் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருந்தது. இதன் காரணமாக பலர் கொத்தமல்லித் தழைகளை பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் பல ஏக்கரில் கொத்தமல்லி தழைகள் அழுகிய நிலையில் காணப்படுகிறது. மேலும் சில விவசாயிகள் கொத்தமல்லி தழைகளை ஆற்றில் வீசி விட்டனர்.
விஜய் மக்கள் இயக்க இளைஞரணி உதவி:
கொத்தமல்லி தழைகளை விவசாயிகள் ஆற்றில் வீசியது குறித்து விஜய் ரசிகர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் இளைஞரணி (Vijay People's Movement Youth) சார்பாக கொத்தமல்லி தழைகள் விளைவித்த விவசாயிகளின் தோட்டத்திற்கு நேரடியாக சென்று கொத்தமல்லி தழைகளை விலைக்கு வாங்கி தேனி வாரச்சந்தைக்கு (weekly market) கொண்டு வந்து பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தனர். இலவசமாக வழங்கப்பட்ட கொத்தமல்லித் தழைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு குவிந்தனர். இதனால் அங்கு கடுமையான கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.
இலவச விநியோகம்:
இலவசமாக கொத்தமல்லித் தழைகளை வழங்கியது குறித்து விஜய் ரசிகர் பிரகாஷ் கூறுகையில், ''விலை வீழ்ச்சியால் கொத்தமல்லி தழைகளை சந்தைக்கு கொண்டு வருவதற்கு கூட வழியில்லாமல் விவசாயிகள் தவித்துள்ளனர். நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் பாதிப்படையக் கூடாது என்ற நோக்கத்தோடு தோட்டத்திற்கு நேரடியாக சென்று எங்களது வாகனத்திலேயே 500 கிலோ கொத்தமல்லி தழைகளை 3,500 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் (Free distribution) செய்தோம் என தெரிவித்தார். விஜய் ரசிகர்கள் எடுத்த இந்த அசத்தல் முடிவால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இயற்கை வழி விவசாயம் செய்தால், தோட்டக்கலைத் துறை சார்பில் மானியம்!
உரச்செலவை குறைப்பது எப்படி? வழிகாட்டுகிறது உழவர் பயிற்சி நிலையம்!