வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் விபரங்களை இணைப்பது தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு மிக விரைவில் வெளியிடும்,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்து நேற்று ஓய்வு பெற்ற சுஷில் சந்திரா தெரிவித்தார். தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவர் நேற்று கூறியதாவது: என்னுடைய பதவி காலத்தில் இரண்டு முக்கிய தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன்.
அதிக சேவை (High Service)
வாக்காளர் பட்டியலில், 18 வயதுக்கு மேற்பட்டோர் தங்களுடைய பெயரை பதிவு செய்வதற்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதை, ஆண்டுக்கு நான்கு முறையாக மாற்ற பரிந்துரைத்தோம். இதற்கான மசோதா நிறைவேறியுள்ளது. விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்தது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விபரங்களை இணைப்பது.
இதன் வாயிலாக, போலி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒழிக்க முடியும். மேலும், வாக்காளர்களுக்கு அதிக சேவைகளை வழங்க வாய்ப்பு கிடைக்கும். இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு மிக விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறேன். இது கட்டாயமில்லை; என்றாலும், ஆதார் விபரங்களை இணைக்காததற்கு நியாயமான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.
பெரிய சவால் (The big challenge)
பதவிக் காலத்தில் சந்தித்த மிகப் பெரிய சவால், உத்தர பிரதேசம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தியது தான். கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்த நிலையில், அந்த சவாலை சிறப்பாக கையாண்டோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க
காய்ச்சலுக்கு புதிய பெயர் வைத்தால் மக்களுக்கு பயம்: சுகாதாரத்துறை செயலாளர்!