தமிழகத்தில் ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை 840 ரூபாய் அதிகரித்தது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. குறிப்பாக திருமண சீசன் தொடங்கிவிட்ட நிலையில், தங்கம் விலையில் நிலவும் அதிரடி மாற்றம் திருமணம் வைத்திருப்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தால், உலக பொருளாதாரம் பாதிக்கும் எனக்கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், தங்கத்தின் விலை கிடு கிடுவென அதிகரித்து வருகிறது.கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த ஆபரணத் தங்கம் நேற்று ஒரேநாளில், சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்தது.
உலக நிலவரங்களால், சில தினங்களாக உள்நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் 11ம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் 4,610 ரூபாய்க்கும், சவரன் 36 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து நேற்று ஒரே நாளில், தங்கம் கிராமுக்கு 105 ரூபாய் வீதம் அதிரித்து, 4,715 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் சவரனுக்கு அதிரடியாக 840 ரூபாய் உயர்ந்து, 37 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து, 67.40 ரூபாயாக இருந்தது.
இருப்பினும் மாலையில் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. இதனால் ஒரு கிராம் தங்கம் 4,653ரூபாய்க்கும், ஒரு சவரன் 37,224ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வருவது, திருமணம் நடத்த உள்ளவர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
35 சதவீதம் வரை
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையேப் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. போர் மூண்டால் உலக பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். பொருளாதார துறைகள் சார்ந்த பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும். இதனால், தற்போதே முதலீட்டாளர்கள் திட்டமிட்டு, தங்கத்தின் மீது தங்கள் முதலீட்டைத் திருப்பி வருவதால், அதன் விலை உயர்ந்து வருகிறது. உள்நாட்டிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதுதவிர, வைரத்தின் விலையும் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...