“நீரின்றி அமையாது உலகு” - இதன் பொருள் அனைவருக்கும் நன்று புரிந்திருக்கும். தண்ணீரின்றி நம் தலைநகரம் தத்தளித்து வருகிறது. சென்னையில் இது வரை இல்லாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள், வணிக நிறுவனங்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளும் அடியோடு வறண்டு போனதால், தற்போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் , வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.
தண்ணீர் பற்றாக்குறையால் சென்னையில் உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மூடப்படும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தோ அல்லது மற்ற நகரங்களில் உள்ள கிளை நிறுவனங்களில் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதே போன்று சென்னையில் உள்ள பல உணவு விடுதிகள் மூடப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கல்வி துறை, பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்க ஆலோசனை செய்து வருகிறது. போதிய அளவு தண்ணீர் வழங்க இயலாததால் இந்த நடவடிக்கை எடுக்க உள்ளது.
அரசு நடவடிக்கை
- தற்போது சென்னையில் 9,000 லாரிகள் மூலம் குடிநீர் தேவைக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் நெமிலியில் 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டம் தொடங்க பட உள்ளது. இதன் முலம் தென் சென்னை முழுவதும் தண்ணீர் கிடைக்க பெறும் என அரசு உறுதியளித்துள்ளது.
- மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் பயணிப்பதால் சிறிய ரக லாரிகள் முலமாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
- நிலத்தடி நீர் மட்டம் மற்றும் நீர் ஆதாரங்கள் குறைந்து விட்டதால் பொதுமக்கள் நிலைமையினை உணர்ந்து குடிநீரை விரையம் செய்யாமல் சேமித்து சிக்கனமாக பயன்படுத்தம் படி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- விளைநிலங்களில் நீர் எடுக்க தடை விதிக்க பட்டுள்ளது. அரசு அனுமதி பெறாமல் குடிநீர் எடுப்பது சட்டப்படி குற்றமாக அறிவித்துள்ளது.
- கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தினை செயல் படுத்த இருப்பதால் இதற்கு உடனடியாக தீர்வு காண இயலும் என்றார்.
Anitha Jegadeesan
Krishi Jagran