தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நீர்வளத்துறையின் மூலம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட 6 அணைகளுக்கான "சிறந்த அணை பராமரிப்பு" விருதுகளை வழங்கினார்.
2011-2012 முதல் தமிழ்நாடு அரசு ஒரு குழுவினை அமைத்து சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட அணையினை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து அவ்வணையில் பணிபுரியும் உதவி பொறியாளர் / இளநிலை பொறியாளர் முதல் செயற் பொறியாளர் வரை ஊக்க தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10,000/- மற்றும் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
விருதுக்கு தேர்வான 6 அணைகள் என்ன?
இன்று (03.01.2025), தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அரசால் அமைக்கப்பட்ட குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட அணைகளின் விவரம்.
2016-2017-ஆம் ஆண்டிற்கு கன்னியாகுமரி மாவட்டம், பெருஞ்சாணி அணை, 2017-2018 ஆம் ஆண்டிற்கு ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 2018- 2019 ஆம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டம், வாணியாறு அணை, 2019-2020 ஆம் ஆண்டிற்கு கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணை, 2020-2021 ஆம் ஆண்டிற்கு சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மற்றும் 2021-2022 ஆம் ஆண்டிற்கு தென்காசி மாவட்டம், கருப்பாநதி அணை.
மேற்குறிப்பிட்ட 6 அணைகளில் பணிபுரிந்த செயற் பொறியாளர், உதவி செயற் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் / இளநிலை பொறியாளர் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்க தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10,000/ வழங்கியும் தலைமைப் பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., நீர்வளத்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) S.மன்மதன், நீர்வளத்துறையின் மண்டலத் தலைமைப் பொறியாளர்கள் M.ஜானகி, R.தயாளகுமார், S.முருகேசன் மற்றம் S.ரமேஷ், நீர்வளத்துறையின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவின் தலைமைப் பொறியாளர் S.கோபாலகிருஷ்ணன் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள் கலந்துக் கொண்டனர்.
அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்:
விருது வழங்கி சிறப்பித்ததைத் தொடர்ந்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலையில் தலைமைச் செயலகத்தில் துறை ரீதியான ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் 2021-2022 முதல் 2024-2025 வரையிலான ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அதிகரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், காவிரி வடிநில பகுதிகளிலுள்ள பாசனக் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட உள்ள சிறப்பு தூர்வாரும் பணிக்கான மதிப்பீடுகளை விரைந்து தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தினார். 2025-2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள புதியப் பணிகள் குறித்தும் பொறியாளர்களுடன் அமைச்சர் துரைமுருகன் கலந்தாலோசித்தார்.
Read more:
மருந்தாளுநர் டூ முழு நேர இயற்கை விவசாயம்: பல பயிர் சாகுபடியில் அசத்தும் கென்னடி
நெற்பயிருக்கான உரம் டூ கால்நடை தீவனம்: அசோலாவின் தன்மை என்ன?