News

Monday, 30 June 2025 04:15 PM , by: Harishanker R P

விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நீருக்கு வரி விதிக்க திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்திற்காக நிலத்தடியில் இருந்து 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது நிலத்தடியில் இருந்து நாம் எடுத்து பயன்படுத்துவதில் 83 சதவிகிதம் ஆகும். இதனால் விவசாயத்தை காரணம் காட்டி அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதைத் தடுக்க மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து 22 புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதற்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தும் சோதனைகள் முடியும் நிலையில் இருப்பதாகவும், பயனர்கள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி செலுத்த வேண்டி இருக்கும் என்று கூறியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் விவசாயத்திற்கான தண்ணீரை பயன்படுத்த விவசாயிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதில், அண்மையில் ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர் பாட்டீல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது தெளிவாக பதிலளித்தார். விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்க மத்திய அரசு எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை . இது குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை. அதே சமயம், இந்த திட்டத்தின்கீழ் பயனாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பது குறித்த முடிவு மாநிலங்களிடம் மட்டுமே இருக்கும் என்பதால், அந்தந்த மாநிலங்கள் இதுகுறித்த முடிவை எடுக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் நீர் மேலாண்மையை நவீன மயமாக்குதலையே இத்திட்டம் நோக்கமாக கொண்டிருக்கிறது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த விரும்புவதாக கூறியிருக்கிறார். மத்திய அரசின் இந்த முயற்சியானது நீர்ப்பாசன செயல்திறனை மேம்படுத்துதல், சமமான நீர் விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் நீர்வளத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துதல் போன்றவற்றை ஊக்குவிப்பதையே நோக்கமாக கொண்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

விவசாயம் மற்றும் நீர் இரண்டுமே இந்திய அரசியலமைப்பின்கீழ் மாநிலங்களுக்கு உட்பட்டவை. எனவே விவசாயிகளிடையே தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டாம்.

இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)