பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்த நிலையில், இதுக்குறித்து முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும் என பால் வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் கீழ் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தினால் நாளொன்றுக்கு சுமார் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பசும்பாலை ரூ.32, எருமை பாலினை ரூ.42 என்கிற அளவிலும் கொள்முதல் செய்கிறது.
இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு, தனியார் நிறுவனங்களின் கொள்முதல் விலைக்கு இணையாக லிட்டருக்கு 7 ரூபாய் வரை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் அரசிற்கு கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக அமைச்சருடன், சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்காமல், சாலையில் பாலினை கொட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது நடைப்பெற்று வரும் தமிழக சட்டப்பேரவையிலும் இப்பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.
மாட்டுத் தீவனம் மற்றும் இதர இடுபொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை அரசை வலியுறுத்தினர். இப்பிரச்னை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசி தீர்வு காணப்படும் என பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் தெரிவித்தார்.
அரியவகை நோய் சமீபத்தில் பல மாநிலங்களில் கால்நடைகளைத் தாக்கி ஆயிரக்கணக்கான விலங்குகள் இறந்ததாக அமைச்சர் கூறினார். தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நோய் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பால் சப்ளையர்கள் எல்லைப் பகுதிகளில் அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்யத் தொடங்கினர். முதல்வரிடம் கலந்தாலோசித்து இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார்.
கே.பி.முனுசாமி (அதிமுக எம்.எல்.ஏ) பேசுகையில், ''கிராமப்புற பொருளாதாரத்தில், பால் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. மாட்டுத் தீவனத்தின் விலை 100% உயர்ந்துள்ளது மற்றும் பாலின் தரம் கொழுப்பின் அளவைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. எனவே, பால் உற்பத்தியாளர்களுக்கு தரமான கால்நடை தீவனத்தை அரசு வழங்க வேண்டும். மாட்டுத் தீவனத்திற்கும் அரசு விலை நிர்ணயம் செய்து, அதற்கேற்ப விநியோகஸ்தர்களை விற்பனை செய்ய அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில், பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்றார்.
அண்டை மாநிலங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கப்படுவதைப் பற்றி ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ் எம்.எல்.ஏ) குறிப்பிட்டார், மேலும் இதுபோன்ற மானியங்கள் தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
மேலும் காண்க:
இந்த வருஷம் கன்பார்ம்.. சீனாவை ஓரம் தள்ளும் இந்தியா- எவ்வளவு மக்கள்தொகை தெரியுமா?