தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கோரத்தாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயல், இன்று (05-12-2023) தெற்கு ஆந்திரா கடற்கரையை பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலின் தீவிரத்தால் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக பூந்தமல்லி பகுதியில் தலா 34 செ.மீ மழையும், ஆவடி பகுதியில் 28 செ.மீ , காட்டுப்பாக்கம் KVK AWS பகுதியில் 27 செ.மீ மழையும் பெய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கனமழை முற்றிலுமாக குறைந்துள்ள நிலையில் அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு-
05.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
06.12.2023 மற்றும் 07.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மேலும் வானிலைத் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளவும், மீனவர்களுக்கான எச்சரிக்கை தொடர்பான விவரங்களை அறியவும்: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் காண்க:
இயல்பு நிலைக்கு திரும்பும் KTCC : 4 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரி விடுமுறை
ஒரே நாளில் ரூ.1000 சரிந்தது தங்கத்தின் விலை- புயல் தான் காரணமா?