தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச் சலனம் காரணமாக கன மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குமரிக் கடல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. குமரி கடல் பகுதியில் சூறைக் காற்று விசுவதற்கான வாய்ப்பு இருப்பதால் 2 நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் என இருக்கும்.