2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் நிதியுதவிக்காக ரூ.1,444 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் வரவேற்பு தெரிவித்தனர்
தமிழ்நாடு பட்ஜெட் 2023
தமிழ்நாட்டின்2023-24ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கடந்த 20ஆம் தேதி தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு துறைகள் சார்ந்த நலத்திட்டங்கள் மற்றும் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பற்றிய அறிவிப்புகளும் வெளியானது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கவனித்து வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதன்படி, இந்த பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்திற்காக 39 ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும் எனவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 1500-ல் இருந்து 2000 ஆக உயர்த்துதல், மாற்றுத்திறனாளிகளின் தொழில் வளர்ச்சிக்கு கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவிப்புகள் வெளியாயின.
இதுகுறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் அமைப்பும் , மாற்றுத்திறனாளிகளும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்குஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி பார்வையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தொடர்ந்து நன்றாக இயங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டாலும் அது மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைவதில் பல சிக்கல்கள் உள்ளது.
அதை உடனடியாக களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு அரசு ஒதுக்கிய பட்ஜெட்டை மிகவும் வரவேற்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை திட்டம் செயல்படுத்தப்படுவது, மாற்றுத்திறனாளிகள் எளிதில் அனுகக்கூடிய தடையற்ற கட்டமைப்புகளை அமைத்து தொழிற்பயிற்சி மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அனைவரையும் வளர்ச்சி அடைய வைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . இதனை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம்.
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூபாய் 1500 ஆகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூபாய் 2000 ஆக அதிகரிக்கப்பட்ட நிலையில் இதற்கென வரவு செலவு திட்டத்தில் 1,444 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்” என தெரிவித்தனர்.
மேலும் படிக்க: