முதுமலை புலிகள் காப்பகத்தில் (எம்டிஆர்) உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில், பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானையான 'மூர்த்தி' வயது முதிர்வு காரணமாக நேற்றிரவு இறந்தது. இதனால் அதனை பராமரித்து வந்த வனத்துறை அதிகாரிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
சினிமா ஹீரோக்களை மிஞ்சும் அளவுக்கு தனது அதிரடியால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட யானை தான் மூர்த்தி. தந்தம் இல்லாத ஆண் யானை மக்னா என அழைக்கப்படுவது வழக்கம். தற்போது உயிரிழந்த மூர்த்தி யானை 1998 ஆம் ஆண்டுக்கு முன்பு கேரளாவில் 23 பேரை தாக்கி கொன்றது. இதன் விளைவாக, அப்போதைய கேரள தலைமை வனவிலங்கு காவலர் யானையினை துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் அந்த சமயம் கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்குள் நுழைந்த மக்னா யானை மேலும் இருவரைத் தாக்கி கொன்றது. இதையடுத்து, தமிழக வனவிலங்கு காப்பாளர்களும் ஆக்ரோஷமான மக்னா யானையினை பிடிக்க தீவிரம் காட்டினர்.
பிரபல தெப்பக்காடு யானைகள் முகாம் கால்நடை மருத்துவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உதவியுடன் 1998 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி கூடலூர் வனப் பிரிவுக்குட்பட்ட வச்சிக்கோழி பகுதியில் யானை பிடிப்பட்டது. ஆனால் அந்த யானையில் உடம்பில் பல்வேறு காயங்கள் இருந்தன. இதனை கண்ட டாக்டர் கிருஷ்ணமூர்த்தி யானைக்கு உரிய சிகிச்சை அளித்தார்.
இதன்பின் அடையாளம் தெரியாத அளவிற்கு சாந்த சூருபியாக மாறியது மக்னா யானை.டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் நினைவாக மக்னாவுக்கு மூர்த்தி என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர் அந்த யானை தெப்பக்காடு யானைகள் முகாமில் மறுவாழ்வுக்காக அனுப்பப்பட்டது.
மூர்த்தியை பிடிப்பதற்கான நடவடிக்கையை நினைவுகூர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் ஸ்ரீதர், “மக்னா ஒரு அரிய இனம் என்று எனது தந்தை சுட்டிக்காட்டியதை அடுத்து, அப்போதைய தலைமை வனவிலங்கு காப்பாளர் மூர்த்தியை பிடிக்க முடிவு செய்தார். அந்த யானை 9.5 மீ உயரத்தில் பிரமாண்டமாகவும், 4.5 டன் எடையுடனும் இருந்தது.
தொடர்ந்து பேசிய அவர், அறுவை சிகிச்சையின் போது நான் எனது தந்தையுடன் இருந்தேன். கேரளாவில் விவசாயிகள் மற்றும் வேட்டையாடுபவர்களால் ஏற்பட்டதாகக் கூறப்படும் விலங்கின் உடல் முழுவதும் 15 தோட்டாக் காயங்கள் இருந்தன என்றார். மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் வரும் காட்டு யானைகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும் ‘கும்கி’ யானையாக மூர்த்தி யானைக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட வனப் பாதுகாவலரும், எம்.டி.ஆர்., கள இயக்குனருமான டி.வெங்கடேஷ் கூறுகையில், ''மூர்த்தி யானையினை போன்று அமைதியான யானையை முகாமில் பார்த்திருக்க முடியாது. பிடிபட்டதற்கு பின் முற்றிலும் மாறிய மூர்த்தி யானை அனைத்து பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கியது. இருப்பினும், கடந்த ஆண்டு முதல், வயது முதிர்வு காரணமாக அவற்றின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது” என்றார்.
உடல்நிலை மோசம் அடைந்த நிலையில் மூர்த்தி யானைக்கு ஓய்வளிக்கப்பட்டு தெப்பக்காடு கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ்குமார் மூலம் யானைக்கு போதிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சனிக்கிழமை இரவு 9 மணியளவில் மூர்த்தி காலமானது. மூர்த்தி யானையின் மறைவு வனத்துறை அலுவலர்கள் மற்றும், யானை பராமரிப்பாளர்களை கவலையடையச் செய்துள்ளது.
இதையும் காண்க:
முடிவுக்கு வராத போர்- சென்னையில் ஜெட் வேகத்தில் உயரும் தங்க விலை