அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள, ஒரே நாடு; ஒரே பத்திரப்பதிவு திட்டம் சாத்தியமாகும்' என, சொத்துக்கள் தொடர்பான சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர். மத்திய பட்ஜெட்டில், 'ஒரே நாடு; ஒரே பத்திரப் பதிவு திட்டமும், எங்கிருந்தும் பத்திரப்பதிவு செய்யும் முறையும் அமல்படுத்தப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சொத்து விவகாரங்களுக்கான சட்ட வல்லுனரும், வழக்கறிஞருமான ஜி.ஷியாம் சுந்தர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு! (Single Country Single Bond System)
மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு நல்ல முயற்சி என்பதில் மாற்று கருத்து இல்லை. இதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில், பல மாநிலங்கள் நீண்ட தொலைவுக்கு பயணிக்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லாமல், மக்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே இணையவழியில் பத்திரங்களை பதியலாம். ஆந்திராவில் மட்டும் தான், எந்த சார் - பதிவாளர் அலுவலகத்திலும் சொத்து விற்பனை பதிவு செய்ய முடியும். பத்திரப்பதிவு தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டில், தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், இணைய வழியே பத்திரப்பதிவு இன்னும் அமலுக்கு வரவில்லை.
இதற்கு, 40 ஆண்டுகளுக்கான சொத்து பத்திரங்கள், வில்லங்க சான்றுகள் உள்ளிட்ட வருவாய் ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட வேண்டும். சொத்து பத்திரம், பட்டா ஆகியவற்றில் உரிமையாளரின் ஆதார் எண், புகைப்படம் இணைக்கப்பட வேண்டும். இதை முழுமையாக செயல்படுத்தினால் தான், எங்கிருந்தும் பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியும்.
தமிழக அரசு நினைத்தால், இது எளிதாக முடியும் விஷயம் தான். ஆனால், சில அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம். ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு முறை எந்த விதத்திலீ பயனளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க
ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்: தமிழக முதல்வர் அறிவிப்பு!