பள்ளி மாணவர்களுக்கு இந்த முறை கோடை விடுமுறையை எப்போது விடுவது?, எத்தனை நாட்கள் விடுமுறை அளிப்பது உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து வருவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். விரைவில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவல், அதை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக இரண்டு ஆண்டு காலமாக மாணவர்களின் கல்வியில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கடந்த கல்வி ஆண்டு முழுவதுமாக காணொளி காட்சியிலேயே சென்ற நிலையில் இந்த ஆண்டு பரவல் கொஞ்சம் மட்டுப்பட்டதால் சில மாதங்களுக்கு முன்னர் நேரடி வகுப்புகள் தொடங்கின.
ஆனாலும் மாணவர்கள் மனதளவில் இயல்பு நிலைக்கு திரும்ப மிகவும் கஷ்டப்பட்டனர். அதற்குள் கனமழை, வெள்ளம் ஏற்பட மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. அது முடிந்த பின்னர் கொரோனா மூன்றாவது அலை உருவாகி மீண்டும் பள்ளிக்கூட கதவுகள் அடைக்கப்பட்டன.
இதனால் இந்த ஆண்டும் பொதுத் தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்தது. மாணவர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.ஆனால் இம்முறை கட்டாயம் தேர்வை நடத்திவிட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உறுதியாக இருந்தது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டது.
அந்த வகையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க மீதமுள்ள வகுப்புகளுக்கு எப்போது தேர்வு நடைபெறும், கோடை விடுமுறை எப்போது விடப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்ஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அமைச்சர், கொரோனா சூழலால் ஒவ்வொன்றும் தள்ளிப் போய்கொண்டே வருகிறது. மே 5 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. பிற வகுப்பு மாணவர்களுக்கு பாடத் திட்டத்தை முடிக்க வேண்டும். இந்த சூழ்நிலையிலும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு விடுமுறையும் வழங்கப்பட்டது. எனவே மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. அதிகாரிகளுடன் நடத்தப்படும் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவினை விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க...
பெண்கள் இளம்வயதில் பூப்படைவதற்கு பிராய்லர் கோழி காரணமல்ல!
கெட்டக் கொழுப்பைக் கரைக்க வேண்டுமா? இது ஒன்றே போதும்!