கொரோனா வைரசுக்கு எதிரான முக்கியமான ஆயுதமாக தடுப்பூசிகள் உள்ளன. இருப்பினும் 'ஒமைக்ரான்' (Omicron) வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாதுகாப்பு அம்சங்களைத் தொடர வேண்டும். மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் தற்போது பல நாடுகளிலும் தென்பட்டு உள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஏழு நாடுகளில் இந்த புதிய வீரியமிக்க வைரஸ் தென்பட்டுள்ளது.
இலக்கு (Target)
ஒமைக்ரான் வகை வைரஸ் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் தெரியவில்லை. அது தொடர்பாக தொடர் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோர், உரிய பாதுகாப்பு இல்லாதோரை பாதுகாப்பதே நம் தற்போதைய இலக்காக இருக்க வேண்டும்.
ஒமைக்ரான் குறித்து மூன்று முக்கிய கேள்விகள் தற்போது எழுகின்றன; அது எவ்வளவு வேகமாக பரவக் கூடியது, ஏற்கனவே உள்ள தடுப்பூசிகளால் அதை தடுக்க முடியுமா, மற்ற வகை கொரோனா வைரஸ்களை விட இது எவ்வளவு வீரியமிக்கது என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
தற்போதைக்கு நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வகை வைரசை விட வேகமாக பரவி வருகிறது. மிகக் குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று அஜாக்கிரதையாக இருந்து விடக் கூடாது.
பாதிப்பு
சமூக இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் (Mask) அணிதல் என பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். மேலும் சரியான நேரத்தில் கண்டுபிடித்து உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிகிறது.
அதனால் தடுப்பூசி போட்டாலும் பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
ஓமிக்ரான் தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்: WHO எச்சரிக்கை!