நேற்று மழைக் காரணமாக வெள்ளம் ஏற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பல பகுதிகளுக்கு சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமில்லாமல் உதவித் தொகையும் வழங்கினார். தற்போது, அவரிடம் மற்றும் ஒர் கோரிக்கையை விவசாயிகள் வைத்துள்ளனர்.
காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதல்வரிடம் அளித்த மனுவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழைக்கு நஞ்சை நிலங்கள் 80 சதவீதம் பாதித்ததோடு, அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் வீணாகிவிட்டன. இந்நிலையில் விவசாயிகள் மீது கருணை உணர்வுடன் உதவிக்கரம் நீட்டி அவர்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்திட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து இழப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள்.
முதல்வரிடம் டெல்டா மாவட்ட விவசாய சங்க தலைவர் இளங்கீரன் அளித்த மனுவில், சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால், இதனை காப்பாற்றுவதற்கு உடனடியாக ஏக்கர் ஒன்றுக்கு 1 மூட்டை யூரியா, ஒரு மூட்டை டிஏபி, பொட்டாஷ் உரங்களை மானியமாக வழங்க வேண்டும். முழுமையாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் இந்த மாத மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்துக்கு இன்சூரன்ஸ் கட்டுவதற்கான அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
இவ்வாறு இருக்க அரசின் முடிவு என்ன? அரசு விவசாயிகளின் கோரிக்கை ஏற்று தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்குமா என்கிற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளன.
மேலும் படிக்க:
மலர்கள் சாகுபடி ரூ.60,000 வரை மானியம்
PM Kisan திட்டம் பயன்பெற e-kyc புதுப்பிக்க காலக்கெடு தேதி அறிவிப்பு!