வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்ட நடைபெற்ற 7கட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.
8ம் கட்ட பேச்சுவார்த்தை
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று (வெள்ளிக்கிழமை) 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற விவசாயிகளின் பிரதான கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நானாசாகர் குருத்வாரா தலைவர் பாபா லக்கா டெல்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங்தோமரை சந்தித்தார்.
விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நரேந்திரசிங் தோமர், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையை தவிர விவசாயிகளின் வேறு எந்த வேண்டுகோளையும் பரிசீலிக்க தயார் என அரசு கூறியிருக்கிறது' என்று தெரிவித்தார். இன்றைய பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எட்டப்படும்? என்ற கேள்விக்கு, அதுகுறித்து தற்போது எதுவும் கூற முடியாது எனவும், பேச்சுவார்த்தையில் எந்த விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அது அமையும் எனவும் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
டெல்லியில் டிராக்டர் பேரணிப் போராட்டத்தை கையிலெடுத்த விவசாயிகள்
காரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம்! வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்!
தென்னை ஆராய்ச்சி பணியைத் துவங்க வேண்டுமென விவசாயிகள் அரசிடம் கோரிக்கை!