சிதம்பர கோவிலில் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து திரும்பி சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று கோவிலில் ஆய்வு செய்யும் பணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள புகழ் பெற்ற தில்லை நடராஜர் கோவிலின் வரவு செலவு கணக்கு, கோவில் சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆராய இந்துசமய அறநிலையத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது. மேலும் இக்குழு சாரில் மே 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் ஆய்வு செய்யப்படும் என்றும் கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து நேற்று இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் துணை ஆணையருமான ஜோதி தலைமையில் அதிகாரிகள், சிதம்பர நடராஜர் கோவிலுக்கு ஆய்வு செய்ய வந்துள்ளனர். இக்கோவிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள், அதிகாரிகளை வரவேற்றனர். பின்னர், ஆய்வு குழுவினர் அதிகாரிகள் கோவிலின் கனக சபை மீதேறி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தில்லை கோவிந்த பெருமாள் கோவிலும் வழிப்பட்டனர்.
கோவில் பொது தீட்சிதர்களிடம் ஆய்வு பணிகள் செய்ய ஆவணங்களை அதிகாரிகள் கோரினார். ஆனால் பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆய்விற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களது வழக்கறிஞர் அதிகாரிகளிடம் ஆட்சேபம் கடிதமும் வழங்கினார். இதனையடுத்து , இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலில் ஆய்வு செய்யாமலே திரும்பி சென்றனர்.
ஆனால் நேற்று மாலை 4 மணியளவில் மீண்டும் வந்த ஆய்வுக் குழுவினர் , தீட்சிதர்களிடம் ஆய்வுக்குட்படுமாறு மீண்டும் வலியுறுத்தினர். இருப்பினும், தீட்சிதர்கள் தரப்பில் மீண்டும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் திரும்பி சென்றனர். இந்நிலையில் சிதம்பர நடராஜர் கோவிலின் இன்று ஆய்வு செய்ய வரவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடராஜர் கோவிலில் இரண்டாவது நாளாக இன்று ஆய்வு பணிகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
சிவகங்கை மாவட்டத்தில் சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்