
படித்தது நர்சிங். ஆனால், விவசாயம் செய்யவேண்டும் என்பதில் பெரு விருப்பம் வேதாரண்யத்தைச் சேர்ந்த சுசீலாவுக்கு. இதனால் தனது நர்சிங் வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் சாதித்துக் கொண்டிருக்கிறார் சுசீலா. அதுவும் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு வருகிறார்.
அதுபோக, பல வகையான நாட்டுக் காய்கறிகள், மாமரங்கள், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு என ஒருங்கிணைந்த பண்ணையம் நடத்தி வருகிறார். மொத்தத்தில் அவரது பகுதியில் நம்பிக்கைக்குரிய விவசாயியாக மிளிர்கிறார். நர்சிங் வேலையில் இருந்து விவசாயம்… எப்படி விவசாயப் பக்கம் வந்தீங்க? எனக் கேட்டதும் தனது விவசாயப் பயணம் குறித்து பேசத் தொடங்கினார்.
வேதாரண்யம் தாலுகாவில் உள்ள தேத்தாகுடிதான் எனது சொந்த ஊர். நர்சிங் வேலை பார்க்கும்போது ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக சென்று ஃபீல்ட் விசிட் செய்வோம். அப்படி ஃபீல்ட் விசிட்டிற்கு செல்லும்போது பல விவசாயிகளைப் பார்க்க முடிந்தது. பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் பாரம்பரிய விதைகள் மீது அவர்களுக்கு இருந்த அக்கறையை நேரடியாக உணர முடிந்தது. அப்போதிருந்தே நாமும் விவசாயம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் வந்துகொண்டே இருக்கும்.
எனக்கு குழந்தை பிறந்த பிறகு வேலைக்கு செல்ல முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை நான் எனக்குச் சாதகமாக உருவாக்கிக் கொண்டேன். வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொண்டே வீட்டைச் சுற்றி இருக்கிற இடத்தில் சிறியதாக எனக்குத் தேவையான அளவுக்கு சாகுபடி செய்யலாமென யோசித்து எனது விவசாயப் பயணத்தைத் தொடங்கினேன்.
என்னைப்போலவே எனது கணவருக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம் என்பதால் எனக்கு அவர் பக்கபலமாக இருக்கிறார். விவசாயம் செய்தால் பாரம்பரிய ரகங்களைப் பயிரிட வேண்டும், அதுவும் இயற்கை முறையில் விளைவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எனக்குத் தெரிந்த விவசாயியிடம் இருந்து மாப்பிள்ளை சம்பா விதைகளை வாங்கி முதல் வருடம் ஒரு ஏக்கரில் பயிரிட்டோம். நாங்கள் விவசாயம் செய்வதற்கு முன்பு அந்த நிலத்தில் ரசாயன முறை விவசாயம்தான் நடைபெற்று வந்தது. முதன்முதலாக நாங்கள் இயற்கை உரங்களைப் பயன்படுத்தும்போது குறைவான மகசூலே கிடைத்தது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த சாகுபடியில் மண்ணை எந்தளவுக்கு இயற்கை விவசாயத்திற்கு தகுந்தவாறு பக்குவப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு சரி செய்தோம்.
தற்போது இரண்டு ஏக்கரில் மாப்பிள்ளை சம்பா பயிரிட்டிருக்கிறோம். இதனை விதைப்பதற்கு முன்பு 45 நாட்களுக்கு முன்பாக தக்கைப்பூண்டு விதைத்து அது வளர்ந்த பிறகு நிலத்தில் மடக்கி உழுதேன். பின், ஏக்கருக்கு ஒரு டிப்பர் தொழு உரத்தைக் கொட்டி உழுதேன். நாற்றங்கால் முறையில் சாகுபடி செய்தால் எங்கள் நிலத்திற்கு மகசூல் அதிகமாக கிடைக்காது. அதனால் நேரடி விதைப்பில் விதைத்தேன். நேரடி விதைப்பில் இந்த ரகத்தை அறுவடை செய்ய ஆறு மாதகாலம் ஆகும். மாப்பிள்ளை சம்பா வறட்சியைத் தாங்கி வளரும் ரகம் ஆகும். அதிகளவு மழை பெய்து வயலெங்கும் நீர் தேங்கினால் கூட இந்த ரகம் வளர்ந்துவிடும். அதனால் இந்த ரகத்திற்கு பராமரிப்பும் குறைவுதான்.
நான் கோழி வளர்த்து வருவதால் அதில் இருந்து கிடைக்கும் கழிவுகளை மக்கவைத்து வயலுக்கு உரமாக பயன்படுத்துகிறேன். அதேபோல், மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணம், கோமியத்தைக் கொண்டு கரைசல்கள் தயாரித்து பயிர்களுக்கு தெளித்து வருகிறேன். இந்த முறையில் சாகுபடி செய்வதனால் ஏக்கருக்கு 62 கிலோ எடை கொண்ட 16 மூட்டை நெல் மகசூலாக கிடைக்கிறது. அறுவடை செய்த நெல்லை அரிசியாக மாற்றும்போது முக்கால் பங்கு அளவுக்கு அரிசி கிடைக்கும். இந்த அரிசியை நேரடி முறையில் எனக்குத் தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்கிறேன். இதில் எனக்கு நிறைவான வருமானமும் கிடைக்கிறது’’ என மகிழ்ச்சியோடு கூறுகிறார்.
இயற்கை முறை விவசாயத்தில் பாரம் பரிய ரகங்களைப் பயிரிட்டு வருவதால் உழவு, தொழு உரம் தொடங்கி மேலும் சில பராமரிப்புக்காக ஏக்கருக்கு சராசரியாக ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. மகசூலா கிடைக்கும் நெல்லை அரைத்து அரிசியாக்கி நேரடியாக ஒரு கிலோ ரூ.110க்கு விற்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்கிறது. அதுபோக முறுக்கு, காராச்சேவு, இடியாப்ப மாவு என மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்து வருவதால் ஒரு ஏக்கரில் கிடைக்கும் அரிசியில் இருந்து 70 ஆயிரம் வரை லாபம் பார்க்க முடிகிறது என்கிறார் சுசீலா.
Read more:
துவரம் பருப்பு உற்பத்தி ஆகும் முக்கிய மாநிலங்களில் கொள்முதல் அதிகரிப்பு
மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்! தூங்கும் மத்திய அரசு, வெகுண்டெழுந்த மீனவர்கள்