தொழில் நகரான கோவையில் ஏராளமான பெண்கள் தினமும் பேருந்துகளில் பயணித்து பணிக்குச் சென்று திரும்பி வருகின்றனர். இதனிடையே கோவை மாவட்டத்தில் பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் நகை, பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
கோவை மாநகரில் இயங்கும் பேருந்துகளில் இரண்டு பெண்கள் ஏறிவிடுகின்றனர். அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாதவர் போல் பயணிகள் மத்தியில் காட்டிக் கொள்கின்றனர். தங்க நகை அணிந்த மற்றும் கைப்பை வைத்திருக்கும் தனியாக பயணிக்கும் பெண்களை அடையாளம் கண்டுகொண்டு, ஒரு பெண் மட்டும் பேச்சுக்கொடுக்கிறார்.
தனியாக பயணிக்கும் பெண்களிடம் நைசாக பேச்சுக்கொடுத்துக்கொண்டே உங்கள் சேலையில் கரை படிந்துள்ளது, கம்மல் திருகாணி சரியாக மாட்டவில்லை, கீழே பணம் கிடைக்கிறது என்று பல்வேறு வகைகளில் அவர்களை திசை திருப்புகின்றனர். சம்மந்தப்பட்ட பெண் அசந்த நேரத்தில், மற்றொரு பெண் அவரிடம் இருந்து கைப்பை மற்றும் நகையை கொள்ளையடித்து விடுகிறார்.
அடுத்த பேருந்து நிறுத்தம் வரும் போது இருவரும் பேருந்தில் இருந்து இறங்கிவிடுகின்றனர். தான் ஏமாற்றப்பட்டதை உணராத பெண்கள் பின்னர் தங்கள் உடைமை பறிபோனதை அறிந்து காவல் நிலையங்களுக்கு சென்று புகார் கொடுத்துள்ளனர்.
ஜனவரி மாதத்தில் கோவை மாநகரில் மட்டும் பேருந்தில் பயணித்த போது நகை பறிப்பு நடைபெற்றதாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், கைப்பையை பறித்ததாகவும், திருட முயற்சி நடைபெற்றதாகவும் ஏராளமான வழக்குகள் பதிவாகி வருகின்றன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், \"ஜோடியாக சென்று பயணிகளை திசை திருப்பி கொள்ளையடிக்கும் கும்பல் பெரும்பாலும் வெளியூரைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடிப்பவர்கள் போல் இவர்கள் தங்களுக்கான யுக்தியை பயன்படுத்தி கொள்ளையடிக்கின்றனர்.
இதனால் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேருந்தில் பயணம் செய்ய அச்சம் அடைந்து வருகின்றனர். கூட்டத்தை பயன்படுத்தி பேருந்தில் திருட்டில் ஈடுபட்டு வரும் திருடர்களைப் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவியிடம் பணம் மற்றும் ஏடிஎம் கார்டை திருடி, அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் போது கையும் களவுமாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் தங்கள் உடமைகளை சரியாக கவனித்து உஷாராக பயணம் செய்ய வேண்டும்.
இந்த சூழலில் கூட்டத்தை பயன்படுத்தியும், பயணிகளை திசை திருப்பியும் கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: