முதல்வர் மு.க.ஸ்டாலின், திருத்தணியில் நேற்று நடைபெற்ற விழாவில், 7.56 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2,750 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் 7.22 லட்சம் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. இவற்றில் 1 கோடியே 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில் நகர்ப்புறத்தில் 36 லட்சம் பேரும், கிராமப்புறத்தில் 70 லட்சம் உறுப்பினர்களும் செயல்படுகின்றனர்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி கொரோனா சிறப்புக் கடன் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும், மேலும் 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.71 கோடியில் ஊரக வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பன போன்ற பல அறிவிப்புகள் சட்டப்பேரவையில், வெளியிடப்பட்டன.
தற்போது இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் நோக்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 58,463 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு, ரூ.2,749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்போது, அதே நேரத்தில் இதர மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் அவர், முதலமைச்சராக கலைஞர் பொறுப்பேற்றபோது தருமபுரி மாவட்டத்தில் முதல்முதலாக மகளிர் சுயஉதவிக் குழுவை தொடங்கி வைத்தார் என குறிபிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக்குழுக்களை மேம்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து சிந்தனையில் இருந்தேன் என்றார்.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் மேம்பாட்டுக்காக அதிகாரி அமுதாவை நியமித்துள்ளேன், எனவும் முதல்வர் தெரிவித்தார். அதிகாரி அமுதா, தில்லியில் பணிபுரிந்தவர். அவரை ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மகளிர் சுய உதவிக்குழுக்களின் மேம்பாட்டுக்காக, இனி கவலைப்பட வேண்டாம் என அவர் நம்பிக்கை அளித்தார்.
மேலும் படிக்க:
புதிய வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம்!
நீர் பாசனக் குழாய்கள் வாங்க ரூ.15,000 மானியம்- அரசு அறிவிப்பு!