இயற்கை கொடுத்துள்ள கொடைகளில் மூங்கிலும் ஒன்று, உலக மூங்கில் தினமான இன்று, மூங்கில் பற்றிய நமது புரிதலை, சற்றே புரட்டி பார்ப்போம். இன்றைய இளம் தலைமுறையினரும் இதை பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். தாய்லாந்தில் உள்ள ராயல் வனத்துறை 2009 ஆம் ஆண்டு, 8- வது மூங்கில் மாநாடை நடத்திக் கொண்டிருந்தது. அப்போது மாநாட்டின் முடிவில் மக்களுக்கு மூங்கில் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18 - ஆம் தேதி உலக மூங்கில் தினமாக கொண்டாட பட வேண்டும் என்று முடிவெடுக்க பட்டது. மத்திய அரசும் “தேசீய மூங்கில் இயக்கம்” (National Bamboo Mission) என்ற இயக்கத்தின் மூலம் இதனை பிரபலப்படுத்தி வருகிறது.
மூங்கில் மரம்
மூங்கில் மரங்கள் பரவலாக உலகம் முழுவதும் இருந்து வருகிறது. இதன் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. தாய்லாந்து,பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா, நேபாளம்,வங்காளதேசம், கோஸ்டிரிக்கா, கென்யா போன்ற நாடுகளும் மூங்கில் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றன.
புல் வகையை சேர்ந்தது என்றாலும் 4000 மீட்டர் உயரம் வரை வளர கூடியது. பொதுவாக இவ்வகை மரங்கள் மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது.
உலகம் முழுவதும் சுமார் 1400 இனங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அவற்றில் 136 இனங்கள் நம் நாட்டில் உள்ளன என்பது குறிப்பிட தக்கது. இதில் ஒரு சில இனங்கள் ஒரே நாளில் சுமார் 30 செ.மீ வரை கூட வளரும் தன்மை கொண்டது.
பிற மரங்களுடன் ஒப்பிடுகையில் மூங்கில் மரம் வளி மண்டலத்தில் உள்ள அதிக அளவிலான கார்பன் டை ஆக்சைட் எடுத்துக் கொண்டு, அதிக அளவிலான பிராணவாயுவை (ஆக்சிஜன்) வெளிவிடுகிறது என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எனவே தான் மூங்கில் அதிகமாக வளர்ந்துள்ள இடங்கள் குளிர்ச்சியாக இருக்கும்.
பச்சைத்தங்கம் என்றும், ஏழைகளின் மரம் என்றும், குறிஞ்சி இன மக்களின் வாழ்வாதாரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
சங்க காலங்களில் திருமணத்தின் போது மணமக்களை “ஆல் போல் தத்து அருகது போல வேரோடி, மூங்கில் போல் சுற்றம் முசியாமல்" என வாழ்த்துவர். அதன் பொருள் மூங்கிலானது தொடர்ந்து வேரிலிருந்து கன்று தோன்றி, தன் இனத்தோடு பலஆண்டுகள் இணைந்து வளரக் கூடியது. ஒரு மூங்கில் வளர்ந்து பல தலைமுறை தாவரங்களை புதராக உருவாக்கும். மணமக்களும் இதேபோன்று பல தலைமுறைகளை உருவாக்கி வாழ வேண்டும் என்பார்கள்.
ஒரு மூங்கில் மரத்தின் ஆயுட்காலம் வயது 60 ஆண்டுகள் தான் என்றாலும் அதிலிருந்து நாம் பெறப்படும் பலன்கள் ஏராளம். ஆயுட்காலம் நிறைவடையும் காலத்தில் மட்டுமே பூக்கள் பூக்கும். இதிலிருந்து பெறப்படும் அரிசி மலைவாழ் மக்களின் பிரதான உணவு ஆகும்.
மூங்கிலின் மருத்துவ குணங்கள்
மூங்கிலின் ஒவ்வொரு பகுதியும் மனிதனுக்கு உபயோகமா உள்ளது. இலை, கணு, வேர், விதை, உப்பு ஆகியவை அனைத்தும் மருத்துவப் பயனுடையது. கைவினை பொருட்கள் செய்யவும், மூங்கில் அரிசி, மூங்கில் குருத்து போன்றவை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. சித்த மருத்துவத்திலும், ஆயுர் வேத மருத்துவத்திலும் இதன் பங்கு அளப்பரியது. பிணி தீர்க்கும் மருந்தாக செயல் படுகிறது.
மூங்கில் இளங்குருத்துகளை கசாயம் தயாரித்து தொடர்ந்து அருந்தி வந்தால், முறையற்ற மாதவிடாய், வெள்ளைப்படுதல் போன்றவை விரைவில் நிவர்த்தியாகும்.
மூங்கில் மரத்தின் இலைகளைக் கஷாயம் போட்டு குடித்து வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்வு பெறும். வாயுக் கோளாறுகள், வயிற்று உப்புசம், வயிற்றுவலி, வயிற்றுப்பூச்சிகள் என அனைத்துக்கும் சிறந்த மருந்து.
மூங்கில் இலைச் சாற்றை உள் மருந்தாகவும், வெளி மருந்தாகவும் மூட்டுவலிக்கு பயன் படுத்தலாம். மூட்டுவலி, இடுப்புவலி, நரம்பு வலி போன்றவற்றிற்கு சிறந்த மருந்து.
மூங்கிலின் இளந்தளிர்களை நசுக்கிப்பிழிந்து சாறெடுத்து, அதை அழுகல் புண்கள் மீது வைத்துக் கட்ட புண்களும் வெகு சீக்கிரம் ஆறும்.
Anitha Jegadeesan
Krishi Jagran