தாய்ப்பாலுக்கு அடுத்து, கோழி முட்டையில்தான் அதிக புரத சத்துக்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. முட்டையை உட்கொள்வதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், கடந்த, 1996 முதல், ஆண்டு தோறும், அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை, உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது. முட்டையின் நன்மைகள் குறித்தும், அதிலுள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மக்களுக்குத் தெரியபடுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம்.
புரதச்சத்துகள் அதிகம் இருக்கும் கோழி முட்டை நம்மிடையே பிரபலமாக இருந்தாலும், உலகளவில் முட்டைக்கான சந்தையில், கோழிமுட்டை மட்டுமன்றி வாத்து, காடை, கௌதாரி போன்றவற்றின் முட்டைகளும் பிரபலமானவை. குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவு, முட்டை மட்டும்தான். எனவே, வளரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் சாப்பிடலாம்.
முட்டையில் உள்ள சத்துக்கள்
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனை உணவுப் பொருட்கள் இருந்தாலும், முட்டைக்கு இணையாது எதுவும் வர முடியாது. ஏனெனில் முட்டையில் அந்த அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. இத்தகைய சத்துக்களால் அவை உடலின் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு தருகிறது. குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளது.
முட்டை மட்டும் இல்லை என்றால், உலகில் எத்தனையோ லட்சம் அடித்தட்டு மக்களுக்கு உணவில் ஊட்டச்சத்து என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்கும். மிகக் குறைந்த விலையில் அதிகப் புரதச் சத்து கொண்ட உணவு, முட்டை. பல நூற்றாண்டுகளாக, உலகம் முழுக்க இருக்கும் மக்கள் முட்டையை உணவாகப் பயன்படுத்தி வருகிறார்கள். உலக அளவில் ‘சூப்பர் உணவு’ என வகைப்படுத்தப்பட்ட உணவுகளில் முட்டையும் ஒன்று. மூளை மற்றும் தசை வளர்ச்சிக்கு, ஞாபகசக்தி மேம்பட, நோய் எதிர்ப்புச் சக்திக்கு, பார்வைத்திறனுக்கு எனப் பலவிதங்களில் முட்டை உதவுகிறது.