ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் ஸ்வீடெனில் நடக்கும் சுற்றுச்சூழல் தினத்தில் 193 நாடுகள் பங்கேற்கின்றன. பல லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கவுள்ளனர். பெருகி வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைப்பதற்காக ஐக்கிய நாடுகளின் தரப்பில் 1972ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோல்ம் நகரில் முதன் முதலாக இந்த உலக சுற்றுச்சூழல் தினம் அறிவிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் தினம் (Environmental Day)
இயற்கை வள ஆதாரங்களை அழிப்பதற்கு எதிராக குரல் கொடுத்தல், இயற்கைக்கு எதிராக இருக்கும் நடவடிக்கைகளைத் தடுத்தல், மக்களிடையே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வாழ்வதற்கு மிக முக்கியக் காரணிகளாக விளங்கும் நிலம் நீர் காற்று போன்றவைகள் மாசடைவதிலிருந்து தடுத்தல் போன்ற காரணங்களுக்காக 1972ல் இருந்து ஒவ்வொரு வருடமும் இந்தச் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தச் சுற்றுச்சூழல் தினம் உருவாக்கப்பட்டு இந்த வருடத்துடன் 50 ஆண்டுகள் ஆகிறது. ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாடுகளில் கொண்டாடப்படும் இந்த சுற்றுச்சூழல் தினமானது இந்த வருடம் ஸ்வீடன் நாட்டில் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஸ்டாக்ஹோல்ம்+50 என்கிற வார்த்தை தற்போது பிரபலமடையத் தொடங்கியுள்ளது.
படித்த மக்கள் படிக்காத மக்கள் என அனைவரும் சுற்றுச்சூழலுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் கேடுகளைப் பற்றி எந்த வித கவலையும் இல்லாமல் பல வருடங்களாகத் தொடரும் இந்த நடவடிக்கைகளால் தான் இன்று நாம் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஒரே ஒரு உலகம் (One and Only World)
ஒவ்வொரு வருடமும் ஒரு மைய கருத்தோடு அனுசரிக்கப்படும் இந்த நிகழ்விற்கு இந்த வருடம் ‘ஒரே ஒரு உலகம்’ என்ற மையக்கருத்து வைக்கப்பட்டுள்ளது. தனி மனித ஒழுக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படாமல் சுற்றுச்சூழலில் எந்த விதமான மாற்றமும் ஏற்படாது என்பதே உண்மை.
இன்னும் இந்த பூமியில் கால் வைக்காத அடுத்த தலைமுறைக்கும், எந்த தவறும் செய்யாத உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் நாம் சொல்லப்போகும் பதில் தான் என்ன?? நமது சுயநலத்தினால் அதிக அளவு ஆதாரங்களை அழித்துவிட்டோம் என்று கூறப்போகிறோமா? யோசியுங்கள்.. இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல. இனிய உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க
எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் நல்லது: ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?
மண்வளம் காக்க தென்னை நாரில் கிப்ட் பேக்: மாற்றத்துக்கான வழி!