உலக கால்நடை தினம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் இறுதி சனிக்கிழமை அன்று கொண்டப்படுகிறது. இந்த ஆண்டிற்கான (2020) கொள்கையாக “சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மனித மற்றும் கால்நடை நலம் காக்க அவசியம்”என்ற தலைப்பை வழங்கியுள்ளது.
இந்த உலகம் என்னும் ஒரே குடையின்கீழ் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். இதில் நமக்கு மட்டும் அதிக அளவு உரிமை இருப்பது என்று நினைப்பது தவறு. வாயில்லா ஜீவன் ஆகிய கால்நடைகள், வனவிலங்குகள், மரங்கள், செடிகள், கொடிகள் ஆகிய அனைத்திற்கும் சமபங்கு உண்டு என்பதை நாம் உணர வேண்டும். இதை அனைத்தையும் பேணிக்காப்பது நம் வருங்கால சந்ததிகளுக்கு நாம் செய்யக்கூடிய மிகப் பெரும் சேவையாகும். இதையே ஒன்றிணைந்த நலம் என்று கூறுகிறார்கள். ஒன்றிணைந்த நலம் என்பது நாம் வாழும் சுற்றுப்புற சூழல் மனிதர்கள் மற்றும் விலங்குகளையும் அதனுடைய ஆரோக்கியத்தையும் குறிக்கிறது.
பல ஆண்டு காலமாக மனிதர்களை நம்பி மிருகங்களும், மிருகங்களை நம்பி மனிதர்களும் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். நமக்கு சத்தான புரதச்சத்து மிகுந்த உணவுகள் பெரும்பாலும் கால்நடைகள்களிடமிருந்து கிடைக்கிறது. இதை உற்பத்தி செய்வதும் அதனுடைய உணவுச் சங்கிலியை பாதுகாப்பதும் வருங்காலங்களில் மிக மிக அவசியமாகிறது.
கால்நடை மருத்துவர் என்பவர் யார்? அவருடைய பங்கு என்ன? பலரும் நினைத்துக் கொண்டிருப்பது கால்நடைகளுக்கு சிகிச்சை கொடுப்பவர், நீங்களும் அப்படி நினைத்தால் அது தவறு. நாம் உண்ணும் உணவில் முக்கிய பங்கு வகிக்கும் புரத சத்து நிறைந்த உணவுகள் கால்நடைகளிடம் இருந்து வருகின்றன. முட்டை, கறி இவை அனைத்தையும் நல்ல முறையில் உற்பத்தி செய்வதில் இருந்து உணவுக்காக வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் இருந்து அனைத்து கட்டங்களிலும் கால்நடை மருத்துவரின் பங்கு முக்கியமாகிறது. மக்கள் தொகை பெருகிக் கொண்டே போய்க் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை உற்பத்தி செய்வது அவசியமாகிறது. அதே சமயத்தில் இந்த உணவு உற்பத்தி செய்யும் பொழுது அதனால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதும் அவசியமாகிறது.
கடந்த 100 ஆண்டு காலங்களில் உலக வெப்பமயமாதல் பெருமளவில் வறட்சியை ஏற்படுத்தி கொண்டு வருகிறது இது உணவு பாதுகாப்பை பெருமளவில் பாதிக்கிறது. அதே சமயம் உணவு உற்பத்தி செய்வதும் ஒரு வகையில் உலக வெப்பமயமாதலுக்கு காரணமாக அமைகிறது.
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாம் உணவை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் அதிலும் புரதச்சத்து நிறைந்த உணவுகளான பால், முட்டை மற்றும் கறி கால்நடைகளிடம் இருந்து வருவது என்பதால் அதனுடைய உற்பத்தியின் தேவையும் அதிகரித்துள்ளது. காலகாலமாக மனிதர்கள் கால்நடைகளை நம்பியே வாழ்ந்து வந்திருக்கின்றனர் அது உணவாகட்டும், உடையட்டும், விவசாயம் ஆகட்டும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது ஆகட்டும், இவை அனைத்திலும் கால்நடைகளின் பங்கு அதிகம் காணப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பும் அவசியம் அதேசமயத்தில் உணவை உற்பத்தி செய்யக்கூடிய விவசாயம் மற்றும் கால்நடை துறையில் உள்ள சிக்கல்களும், அதனை போக்குவதற்கான வழி முறைகளையும், கால்நடை மருத்துவர்களை நிர்ணயிக்கின்றனர் உதாரணத்திற்கு பெருகிவரும் உணவு தேவையை ஈடுகட்ட தரமான முட்டை பால் மற்றும் கறி உற்பத்தி செய்யப்பட வேண்டும் அதேசமயம் இதை உற்பத்தி செய்வதனால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும் இந்த அடிப்படையிலேயே இந்த வருடத்திற்கான தலைப்பு உலக கால்நடைகள் தினம் 2020 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பைங்குடில் விளைவு (Green House gas effect) என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் அதில் பெரும் பங்கு கால்நடையில் சாண வாயு என அழைக்கப்படும் மீத்தேன் வாயு மூலமாக வருகிறது என்கிறது ஆராய்ச்சி.
கால்நடை மருத்துவர்களின் பல பரிணாமங்கள்
- ஆராய்ச்சியாளராக விலங்கிய நோய்களை கட்டுப்படுத்தும் முறைச்சியில் ஈடுபட்டுள்ளனர்
- மருத்துவர்களாக பல சிகிச்சைகளை செய்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை காக்கின்றனர்
- விரிவாக பணிகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை அளித்து வருகின்றனர்.
- பேராசியர்களாக பல மாணவர்களை தலை சிறந்த மருத்துவர்களாக மாற்றுகின்றனர்.
- வனவிலங்கு வல்லுனர்களாக நாட்டின் வனவிலங்குகளை பாதுகாத்து வருகின்றனர்
- மனித நல ஊழியர்களாக உணவு பாதுகாப்பிற்காக பாடுபடுகின்றனர்
- சமூக ஆராய்ச்சியாளராக விவசாயிகளின் துன்பங்களை ஆராய்ச்சி செய்து உதுவுகின்றனர்
கால்நடை மருத்துவர்களின் பங்கு கால்நடைகளை காப்பது மட்டுமல்ல மனிதர்களின் உடல் நலத்தையும் உணவு பொருட்களின் தரத்தையும் பாதுகாக்கும் பெரும் பங்கு கால்நடை மருத்துவரிடம் மட்டுமே உண்டு.
விலங்கிய நோய்கள் அதாவது கால்நடைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய்கள் பெருமளவு இன்று உலகத்தையே முடக்கி போட்டுள்ளது இப்பொழுது நடைமுறையில் நாம் அனைவரும் வீடு அடங்கிக் கிடக்கும் கொரோனா ஒரு உதாரணம்.
சுயநலமாக இதுநாள்வரை வாழ்ந்துவிட்டோம், இனியாவது பொதுநலத்துடன் நம்மை சுற்றி சுழுந்துள்ள சுற்றுப்புற சூழலை காப்போம். நாம் பார்த்து, அனுபவித்து, வாழந்த இந்த வாழ்க்கையை நம் வருங்கால சந்ததியர்க்கும் பாதுகாத்து வைப்போம்.
மனித மனம் மாறட்டும்!!!! சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு பெருகட்டும்!!!!
முனைவர் சா. தமிழ்குமரன்
(கால்நடை நண்பன் JTK)
கால்நடை மருத்துவர் / ஆராய்ச்சியாளர் /பண்ணை ஆலோசகர்
தொடர்புகொள்ள: kalnadai nanban@gmail.com
மேலும் தகவலுக்கு: https://www.youtube.com/c/kalnadainanbanjtk