உலகளவில் பிரபலமான 2-வீலர்ஸ் பிராண்டான யமஹா அதன் வினோ 50சிசி ஸ்கூட்டரை 2022ஆம் ஆண்டிற்காக அப்டேட் செய்துள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட 50சிசி யமஹா ஸ்கூட்டரை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
ஜப்பானில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரக்கூடிய யமஹா ஸ்கூட்டர்களுள் ஒன்றாக விளங்கும் வினோ மாடலுக்கு புதிய ஆண்டிற்கான அப்டேட்டாக புதிய நிறத்தேர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதை தவிர்த்த ஸ்கூட்டரின் மற்ற அம்சங்கள் அனைத்தும் அப்படியே தொடரப்பட்டுள்ளன.
இந்த அப்டேட்டின்படி, பழுப்பு கலந்த நீலம் என்கிற இரட்டை-நிற பெயிண்ட்டில் 2022 யமஹா வினோ ஸ்கூட்டர் அலங்கரிக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பழுப்பு நிறம் ஸ்கூட்டரின் இருக்கை, க்ரிப்கள் மற்றும் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது. புதியதாக வழங்கப்பட்டுள்ள இந்த நீலம்-பழுப்பு பெயிண்ட் தேர்வு யமஹா வினோ ஸ்கூட்டரை மேலும் புத்துணர்ச்சியானதாக காட்டுகிறது.
இந்த புதிய பெயிண்ட் தேர்வுடன் கருப்பு கலந்த பச்சை பெயிண்ட் தேர்வும் 2022 யமஹா வினோ ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பெயிண்ட் தேர்வில் ஸ்கூட்டரின் இருக்கை மற்றும் க்ரிப்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே கூறியதுதான், இயந்திர பாகங்களை பொறுத்தவரையில் 2022 யமஹா வினோ ஸ்கூட்டரில் எந்த மாற்றமும் இல்லை.
வினோ ஸ்கூட்டரில் பொருத்தப்படும் 50சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 4.5 பிஎச்பி மற்றும் 4.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. உண்மையில் இந்த 50சிசி என்ஜினை மற்றொரு ஜப்பானிய மோட்டார்சைக்கிள் பிராண்டான ஹோண்டா யமஹாவிற்கு வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா...! ஏனெனில் வினோ ஸ்கூட்டரினை ஹோண்டாவும், யமஹாவும் கூட்டணியாக இணைந்து தயாரித்து வருகின்றன.
பிரேக்கிங் பணியை கவனிக்க யமஹா வினோ ஸ்கூட்டரில் இரு சக்கரங்களிலும் ட்ரம் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன. சஸ்பென்ஷனுக்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் இரு முனைகளிலும் வழங்கப்படுகின்றன. ஜப்பானில் 2,03,500 யென் என்கிற ஆரம்ப விலையில் யமஹா வினோ ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.1.3 லட்சமாகும்.
மேலும் படிக்க