அதிர்ஷ்டம் இருந்தால் அம்பானியும் ஆகலாம் என பொதுவாக பலர் கூறுவதை கேட்டிருப்போம். இந்த வார்த்தை மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஆம்புலன்சு டிரைவரின் (Ambulance Driver) வாழ்க்கையில் உண்மையாக மாறியுள்ளது. காலையில் ஆம்புலன்சு டிரைவராக இருந்தவர், மாலையில் ஒரு கோடிக்கு அதிபதியாக மாறியுள்ளார். இப்படியொரு ஜாக்பாட் அவருக்கு எப்படி அடித்தது? என கேட்கலாம். வேறென்ன லாட்டரி (Lottery) தான்.
லாட்டரி சீட்டு (Lottery)
பர்தாமன் மாவட்டத்தில் வசித்து வரும் ஷேக் ஹீரா, ஆம்புலன்சு டிரைவராக உள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அண்மையில் 270 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டு வாங்கிய அவருக்கு ஒரு கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது. இதனால், மகிழ்ச்சியின் விளிம்புக்கு சென்ற அவர், பணத்தை பெற்றுக் கொண்டு நேரடியாக காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு, தனக்கு லாட்டரி விழுந்ததையும், அதற்கு பாதுகாப்பு கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
ஒரு கோடி பரிசு (One Crore Prize Money)
அவரின் வேண்டுகோளின் படி காவல்துறையினரும் ஷேக் ஹீராவை பத்திரமாக வீடு வரை அழைத்துச் சென்று விட்டுள்ளனர். லாட்டரி விழுந்தது குறித்து பேசிய ஷேக் ஹீரா, லாட்டரி சீட்டு எப்போதும் வாங்கும் பழக்கம் இருப்பதாக தெரிவித்தார். என்றாவதொரு நாள் லாட்டரி விழும் என கனவு கண்டதாக தெரிவித்த அவர், இவ்வளவு சீக்கிரம் அதிர்ஷ்ட தேவதை எட்டிப்பார்ப்பாள் என நம்பவில்லை எனக் கூறினார். இந்த பணத்தைக் கொண்டு முதலில் இருக்கும் கடனை அடைக்க எண்ணியுள்ளதாகவும், பின்னர் நல்ல வீடு ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், உடல்நலமில்லாமல் இருக்கும் தாய்க்கு, தரமான சிகிச்சை கொடுப்பேன் என்றும் ஷேக் ஹீரா கூறியுள்ளார்.
லாட்டரி விற்பனை செய்து வரும் ஷேக் ஹனீப் பேசும்போது, பல ஆண்டுகளாக லாட்டரி விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். தன்னிடம் லாட்டரி சீட்டு வாங்கிய பல பேருக்கு பரிசுத்தொகை விழுந்திருந்தாலும், இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைப்பது இதுவே முதன்முறை எனக் கூறினார். தன்னிடம் லாட்டரி சீட்டு வாங்கிய ஷேக் ஹீராவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக விழுந்தது மகிழ்ச்சி எனவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க
உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா? கவலைய விடுங்க இதைப் பண்ணுங்க!