சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்துள்ளதாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கத் தொடங்க உள்ள நிலையில் அடுத்த 18 நாட்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள பதிவில் சந்திராயன்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் சுமார் 7 மணியளவில் வெற்றிகரமாக நுழைந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை 14 ஆம் தேதி, இஸ்ரோவின் சார்பில் சந்திராயன் -3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. இந்நிலையில் ஏவப்பட்ட விண்கலமானது, “நிலவின் சுற்றுப்பாதை நுழைவினை (LOI- Lunar Orbit Insertion) வெற்றிகரமாக நிறைவு செய்தது. இதன் மூலம், #சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்க உள்ளது. அடுத்த நிலவின் சுற்றுப்பாதை சூழ்ச்சி (Lunar bound orbit) இன்று (ஆகஸ்ட் 06, 2023), சுமார் 23:00 மணி IST மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது” என்று சந்திரயான்-3 திட்டம் தொடர்பான டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்கலத்தின் அனைத்து அமைப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள ISRO டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் (ISTRAC) உள்ள மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளக்ஸ் (MOX)-லிருந்து விண்கலத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
முன்னதாக ஜூலை 14 ஆம் தேதி ஏவப்பட்ட சந்திராயன் -3 விண்கலமானது தனது சுற்றுப்பாதையினை படிப்படியாக அதிகரித்து ஆகஸ்ட் 1 அன்று, விண்கலம் சந்திரனை நோக்கி ஸ்லிங்ஷாட் மூலம் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் (translunar orbit) நுழைந்தது. சனிக்கிழமை நிலவரப்படி, விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. விண்ணில் ஏவப்பட்ட நாள் முதல் தற்போது வரை சுமார் 3.84 லட்சம் கி.மீ தூரம் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலவின் சுற்றுவட்டப்பாதையினை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை இன்று முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் திட்டமிட்டப்படி இந்த மாதத்தின் பிற்பகுதியில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் சந்திராயன் -3 தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரயான்-3 என்பது நிலவினை ஆராயும் இஸ்ரோவின் திட்டத்தில் மூன்றாவது பணியாகும். இது முன்னதாக நிலவை நோக்கி அனுப்பப்பட்ட சந்திரயான்-2 திட்டத்தின் தொடர் பணியாகும்.
இத்திட்டத்தின் நோக்கமானது நிலவின் மேற்பரப்பில் ஒரு மென்மையான தரையிறக்கத்தை விண்கலமானது வெற்றிகரமாக நிகழ்த்தி ஒரு ரோவரை நிலைநிறுத்தும். இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் மாதிரிகளை சேகரித்து நிலவு குறித்து பல புதிய தகவல்களை கண்டறிய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: ISRO
மேலும் காண்க:
அங்கக விவசாயிகளே நம்மாழ்வார் விருது குறித்து A to Z முழுத்தகவல்