
The Tamil Nadu government has increased the pension amount for elderly
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் முதியோருக்கான ஓய்வூதியத் தொகையினை ரூ.1200 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் துறை ரீதியாக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அமைச்சர்களும் பங்கேற்ற நிலையில் பல்வேறுகள் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை கூட்டத்தின் நிறைவுக்குப் பிறகு, பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். அவர் பேட்டியின் விவரம் பின்வருமாறு-
தற்போது வழங்கப்பட்டு வரும் முதியோர் ஓய்வூதியத்தை ₹1000-ல் இருந்து ₹1,200-ஆக உயர்த்தியும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை ₹1000-ல் இருந்து ₹1,500-ஆக உயர்த்தியும், கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகையினை ₹1000-ல் இருந்து ₹1,200-ஆக உயர்த்தி வழங்கவும் இன்று நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் எப்போது கிடைக்கும்?
உயர்த்தப்பட்ட உதவித்தொகைகள் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும். மேலும் உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். உயர்த்தப்பட்டுள்ள ஓய்வூதியத் தொகை மூலம் சுமார் 30 லட்சம் பயனாளிகள் பயன் பெறுவார்கள் எனவும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
முன்னதாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் அமைச்சர்களின் துறைகளில் நடைபெற்று வரும் பணிகளை எவ்வித தொய்வுமின்றி செயல்படுத்திட வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்:
அமைச்சரவை கூட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு-
”மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.
தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் 1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அதே தருமபுரி மண்ணில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தொடங்கி வைக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை மாண்புமிகு அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்வையிட வேண்டும் என இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளேன்.
#கலைஞர்100-இல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஒரு தலைமுறையையே மாற்றக் கூடிய திட்டம் மட்டுமல்ல; பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும் என எண்ணித் துணிகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க:
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை இரகம்- விசைத்தறி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
Share your comments