பென்சன் வாங்கும் ஓய்வூதியதாரர்கள் வாழ்வுச் சான்றிதழ் (life certificate) சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான பென்சனர்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.
வாழ்வு சான்றிதழ் (Life Certificate)
ஓய்வூதியதாரர்கள் அனைவரும், தொடர்ந்து பென்சன் பெற வேண்டுமெனில் ஒவ்வொரு ஆண்டும் ஜீவன் பிரமாணப் பத்திரம் எனப்படும் வாழ்வுச் சான்றிதழை (Life Certificate) சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். வாழ்வுச் சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று.
கடைசி தேதி
பாதுகாப்பு துறையின் கீழ் பென்சன் வாங்கும் ஓய்வூதியதாரர்கள் (Defence Pensioners) இந்த ஆண்டு மே 25ம் தேதிக்குள் வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
சமர்ப்பிக்கத் தவறியவர்கள்
இந்நிலையில், மே 25ஆம் தேதி நிலவரப்படி 34,636 ஓய்வூதியதாரர்கள் இன்னும் வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பிக்காமல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஓய்வூதியதாரர்கள் நலனைக் கருத்தில்கொண்டு, காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கடைசி தேதி நீட்டிப்பு
34000க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் இன்னும் வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பிக்காமல் இருக்கும் நிலையில், வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மே 25ஆம் தேதியுடன் கடைசி தேதி முடிவடைந்த நிலையில் இன்னும் 34,636 பேர் வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிக்காமல் உள்ளனர். எனவே இவர்கள் ஜூன் 25ஆம் தேதி வரை வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எப்படி சமர்ப்பிப்பது?
-
https://jeevanpramaan.gov.in/ இணையதளம் வாயிலாக வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.
-
அருகில் உள்ள பொது சேவை மையங்கள் (Common Service Centres) வாயிலாகவும் வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
மேலும் படிக்க...
முழு முட்டை Vs வெள்ளைக்கரு – எது ஆரோக்கியமானது?
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!